இலங்கையில் உணவுக்காக போராடும் நிலை வரும்- பிரதமர் ரணில்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று கூறி மக்கள் கோபாவேசம் கொண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெருக்கடி முற்றி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் விக்ரம சிங்கே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

பிரதமர் ரணில் எச்சரிக்கை

அவர் நேற்று முன்தினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் உலகளாவிய உணவுப்பொருள் தட்டுப்பாட்டால் இலங்கை உணவுக்காக போராடும் நிலை வரும் என்று எச்சரித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

இந்த ஆண்டுக்குள் எதிர்பார்க்கப்படுகிற உலகளவிலான உணவுப்பொருள் தட்டுப்பாட்டில் உணவு இல்லா நிலைக்கு தள்ளப்படும் ஒரு சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருக்கும்.

போதுமான உணவு இல்லாமல் போகும் நாடுகள் என உணவு மற்றும் விவசாய அமைப்பு பட்டியலிட்டுள்ள நாடுகளில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன.

‘உணவு தானியங்களை பயிரிடுங்கள்’

கொழும்பு நகரம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும், கைவிடப்பட்ட நிலத்தில் மக்கள் உணவு தானியங்களைப் பயிரிட வேண்டும். ரெயில்வேக்கு சொந்தமான பல நிலங்கள் கைவிடப்பட்டுள்ளன. அவற்றை உணவு தானியங்கள் சாகுபடிக்கு பயன்படுத்த முடியும்.

2023-ம் ஆண்டை விவசாய ஆண்டாக ஆக்க வேண்டியது, இலங்கையின் அத்தியாவசிய தேவையாகி இருக்கிறது. இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கூறினார். கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் என அடுத்தடுத்த உலகளாவிய பிரச்சினைகள், உணவுப்பொருள் உற்பத்தி, வினியோகத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கையில் உணவுக்கு போராடும் நிலை வரும் என்று பிரதமர் ரணில் விக்ரம சிங்கே அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.