திவால் நிலைக்கு தள்ளப்பட்டது இலங்கை?- | Dinamalar

கொழும்பு:இலங்கை அரசு, முதன் முறையாக கூடுதல் அவகாசத்திற்குப் பின்னும் அன்னிய கடன் பத்திரங்களுக்கான வட்டித் தொகையை கூட திரும்பச் செலுத்த முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையில், கொரோனா பரவலால் சுற்றுலா வருவாய் பாதிக்கப்பட்டு அன்னியச் செலாவணி வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதோடு, உணவு, மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றின் பற்றாக்குறையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம், 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் கொதித்தெழுந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இலங்கையின் கடன் மற்றும் வட்டி சேர்ந்து, 3 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. இதையடுத்து, கடன் தொகையை திரும்ப தருவது நிறுத்தி வைக்கப்படுவதாக இலங்கை அரசு கடந்த மாதம் அறிவித்தது. அதேசமயம் ஒரு சில முக்கிய கடன்களுக்கான வட்டி வழங்கப்படும் என தெரிவித்தது. இருந்தும், கடந்த மாதம் இரு அரசு கடன் பத்திரங்களுக்கு, 585 கோடி ரூபாய் வட்டித் தொகையை தர இலங்கை அரசு தவறி விட்டது. இதையடுத்து அளிக்கப்பட்ட, 30 நாட்கள் அவகாசமும் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே நேற்று கூறியதாவது:

இலங்கை அரசு இரு கடன் பத்திரங்களுக்கான வட்டியை செலுத்த தவறி விட்டது. இதற்கு வெவ்வேறு தொழில்நுட்ப வார்த்தைகளை அவரவர் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம். பன்னாட்டு நிதியத்திடம், 2 – 4 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி கேட்டுள்ளோம். இதற்கான பேச்சு நடந்து வருகிறது. அதுவரை எங்களால் கடன், வட்டியை திரும்பச் செலுத்த முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில், இந்த நுாற்றாண்டில் இலங்கை தான் முதன் முறையாக திவால் நிலையை சந்தித்துள்ளது.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணி அரசில், நேற்று ஒன்பது பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த வாரம் நான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் தற்போது மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை, 13 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அமைச்சர்களாக பதவியேற்ற தங்கள் கட்சியினர் இருவரை, சமகி ஜன பாலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிகள் மூடல்

இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் நேற்று பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத் துறை ஊழியர்கள் பணிக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.