விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டாரா? எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு

வாஷிங்டன்,

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தது முதல் சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாறியுள்ளார்.

இந்த நிலையில் எலான் மஸ்க் தன்னுடைய தனி விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதற்காக 2½ லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.94 கோடி) கொடுத்து பிரச்சினையை தீர்த்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல வணிக பத்திரிகை இதுதொடர்பான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பயணித்தபோது எலான் மஸ்க், பணிப்பெண்ணை அழைத்து தனக்கு மசாஜ் செய்யும்படி கூறியுள்ளார். அவரின் வார்த்தையை தட்ட முடியாமல் அந்த பெண் மசாஜ் செய்தபோது எலான் மஸ்க் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதோடு, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்களிலும் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு 2½ லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரவோ, சம்பவம் பற்றி பொதுவெளியில் பேசவோ கூடாது என வற்புறுத்தியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி அளித்த தகவல்களை கொண்டு இந்த கட்டுரையை வெளியிட்டதாக அந்த வணிக பத்திரிகை விளக்கமளித்துள்ளது. ஆனால் இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு என கூறி மறுத்துள்ள எலான் மஸ்க் இந்த கட்டுரை தனக்கு எதிரான அரசியல் ரீதியான உந்துதலைப் பெற்ற ஒரு மோசமான பிரசாரம் எனவும் குற்றம் சாட்டினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.