தமிழகத்தில் 44 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்

சென்னை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாக மாற்றப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாரந்தோறும் நடத்தப்பட்டதன் மூலம் தடுப்பூசி செலுத்தியதால் அரசு சாதனை படைத்தது. ஆனாலும் இன்னும் 44 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடாமல் இருப்பதில் சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதன்மூலம் 12 லட்சம் பேர் பயன் அடைந்தனர். ஆனால் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனால் மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. ஜூன் மாதம் 12-ந்தேதி 1 லட்சம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் ஒரு கோடியே 66 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளதாக சுகாதாரத்துறை புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. அதில் முதல் தவணை தடுப்பூசி மட்டும் 44 லட்சத்து 4 ஆயிரத்து 893 பேர் இதுவரையில் போடாமல் உள்ளனர்.

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உள்ள ஒரு கோடியே 22 லட்சத்து 68 ஆயிரத்து 818 பேர் போடாமல் இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

ஆனால் ஒரு கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 440 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் அதனால் தகுதி உள்ளவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.