ஆசியக் கோப்பை ஹாக்கி: சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு!

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணியில் சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டை பெற்ற தமிழக வீரர்கள் மாரீஸ்வரன் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் மே 23 முதல் ஜுன் 1வரை நடைபெற்ற ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய ஹாக்கி அணி சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கத்தை வென்றது மட்டுமின்றி, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியை தகுதி பெறவும் வைத்துள்ளனர்.
image
இதில் இந்திய ஹாக்கி அணியில் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவில்பட்டியில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் பயின்ற கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன், அரியலூரை சேர்ந்த கார்த்தி ஆகியோர் தமிழகத்திலிருந்து தேர்வு பெற்று இந்திய அணிக்காக விளையாடினர். ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதியது. இது தமிழக அணி வீரர் கார்த்தி அடித்த முதல் கோல் தான் ஆட்டத்தின் டிராவை நோக்கிக் கொண்டுசென்றது.
image
அதே போன்று இந்தத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா – தென்கொரியா மோதின. இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப், மணீந்தர் சிங், சேஷே கவுடா, மாரீஸ்வரன் தலா ஒரு கோல் அடித்தனர். இதில் தமிழக அணி வீரர் மாரீஸ்வரன் கடைசி நிமிடத்தில் அடித்த கோல் தான் போட்டியை டிரா செய்தது மட்டுமின்றி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்தது.
image
ஆசியக் கோப்பை தொடரில் தமிழக வீரர்கள் மாரீஸ்வரன் மற்றும் கார்த்தி இருவரும் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி பாராட்டையும் பெற்றவர். ஆசிய தொடர் முடிவடைந்த நிலையில் நாடு திரும்பிய இரு வீரர்களும் இன்று கோவில்பட்டி நகருக்கு வந்தனர். அவர்கள் இருவருக்கும் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
image
கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் இளம் ஹாக்கி வீரர்கள், பொதுமக்கள், ஹாக்கி வீரர் உறவினர்கள் , சிறப்பு விளையாட்டு விடுதி வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் இருவரையும் மேளதாளம் முழங்க அழைத்துச் சென்றனர். ரயில்வே நிலையம் முதல் மாரீஸ் வரன் வீடு வரை இருவரையும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
image
இதனைத்தொடர்ந்து ஹாக்கி வீரர்கள் மாரீஸ்வரன், கார்த்தி இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆசிய தொடரில் இந்திய அணிக்காக விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நல்ல அனுபவமாக இருந்ததாகவும், ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்பது தங்களது விருப்பம் என்று தெரிவித்தனர். கோவில்பட்டி விளையாட்டு விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார் கொடுத்த பயிற்சி சிறப்பாக இருந்த காரணத்தினால் தான் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளதாகவும், இந்திய அணியில் மற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.