5 பேர் கொண்ட புதுமையான ஆக்கி போட்டி: சுவிட்சர்லாந்தில் இன்று தொடக்கம்

லாசானே,

கிரிக்கெட்டில் 20 ஓவர் போட்டியை போல் ஆக்கியை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கிலும், அதன் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையிலும் சர்வதேச ஆக்கி சம்மேளனம் 5 பேர் கொண்ட ஆக்கி போட்டியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

5 பேர் கொண்ட அணிகள் மோதும் முதலாவது சர்வதேச ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசானே நகரில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்தும், பெண்கள் பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, உருகுவே, போலந்து, சுவிட்சர்லாந்தும் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக்கில் மோதும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய ஆண்கள் அணி முதல் நாளில் சுவிட்சர்லாந்து, பாகிஸ்தானை சந்திக்கிறது. பெண்கள் அணி தொடக்க ஆட்டத்தில் உருகுவேயுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இந்திய ஆண்கள் அணி குரிந்தர் சிங் தலைமையிலும், இந்திய பெண்கள் அணி ரஜனி எதிமர்பு தலைமையிலும் களம் காணுகிறது.

வழக்கமான ஆக்கி ஆட்டம் 60 நிமிடங்கள் கொண்டதாகும். அதில் அணியில் 11 பேர் இடம் பெற்று இருப்பார்கள். ஆனால் புதுமையான இந்த ஆக்கி போட்டியில் கோல்கீப்பர் உள்பட 5 வீரர்கள் இடம் பெறுவார்கள். ஆட்ட நேரம் 20 நிமிடமாகும். அதிகபட்சமாக 4 மாற்று வீரர்களை களம் இறக்கலாம். ஆடுகளத்தின் அளவு வழக்கமாக ஆட்டத்துடன் ஒப்பிடுகையில் இதற்கு பாதி அளவு தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.