மண்ணை காப்பாற்ற 5 முக்கிய விஷயங்கள்: பிரதமர் மோடி தகவல்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விஞ்ஞான பவனில் நடைபெற்ற “மண் காப்போம் இயக்கம்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அங்கிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘மண்ணைக் காப்போம்’ இயக்கத்தைப் பாராட்டிய பிரதமர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது, நாடு புதிய உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இத்தகைய இயக்கங்கள் புதிய முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கோணத்தில் இருப்பதாக அவர் திருப்தி தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கம், கழிவுகளிலிருந்து செல்வம் தொடர்பான திட்டம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகம் குறைப்பு, ஒரு சூரியன் ஒரு பூமி, எத்தனால் கலக்கும் திட்டம் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் பல பரிமாண முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டுகள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் பலதரப்பட்டவை என்று பிரதமர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாக இருக்கும் போது இந்தியா இந்த முயற்சியை மேற்கொள்கிறது. உலகின் பெரிய நவீன நாடுகள் பூமியின் வளங்களை மேலும் மேலும் சுரண்டுவது மட்டுமல்லாமல், அதிகபட்ச கார்பன் உமிழ்வு அவர்களின் கணக்கில் செல்கிறது.

உலகின் சராசரி கார்பன் வெளியேற்றம் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 4 டன் என்று கூறிய பிரதமர், இந்தியாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 0.5 டன் மட்டுமே வெளியேற்றப்படுகிறது என்றார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்தியா நீண்டகால தொலைநோக்குப் பார்வையில் செயல்பட்டு வருவதாகவும், பேரிடர்களைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி, சர்வதேச சூரிய சக்தி கூட்டணி போன்ற அமைப்புகளை நிறுவியதாகவும் அவர் கூறினார். 2070க்குள் இந்தியா பூஜ்ய உமிழ்வு என்னும் இலக்கை எட்ட தீர்மானித்துள்ளதாக பிரதமர் கூறினார்.

மண்ணைக் காப்பாற்ற ஐந்து முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம் என பிரதமர் தெரிவித்தார். முதலில்- மண்ணை இரசாயனமற்றதாக்குவது எப்படி? இரண்டாவது- தொழில்நுட்ப மொழியில் கூறப்படும் மண்ணில் வாழும் உயிரினங்களை எவ்வாறு காப்பாற்றுவது?, மூன்றாவது- மண்ணின் ஈரப்பதத்தை எவ்வாறு பராமரிப்பது?, அது வரை நீர் இருப்பை அதிகரிப்பது எப்படி?, நான்காவது- நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் மண்ணுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்குவது எப்படி?, ஐந்தாவது, காடுகளின் குறைப்பினால் தொடர்ந்து மண் அரிப்பை எவ்வாறு நிறுத்துவது? என்று அதனை பட்டியலிட்டார்.

விவசாயத் துறையில் மண் பிரச்சினையைப் போக்க முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். முன்பு, நமது நாட்டு விவசாயிகளுக்கு மண்ணின் வகை, மண்ணின் குறைபாடு, எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்தது. இப்பிரச்னையை போக்க, நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குவதற்கான மாபெரும் பிரச்சாரம் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மழை நீர் சேமிப்பு போன்ற பிரச்சாரங்கள் மூலம் நாட்டு மக்களை நீர் பாதுகாப்புடன் அரசாங்கம் இணைத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே, நாட்டில் 13 பெரிய நதிகளை பாதுகாக்கும் பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நீர் மாசுபாட்டை குறைப்பதுடன், ஆறுகளின் கரையோரங்களில் காடுகளை வளர்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் 7400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பாக அதிகரிக்க உத்தேசிக்கப்படுள்ளது என்று அவர் கூறினார்.

இயற்கை விவசாயத்தில் நமது மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு பெரிய தீர்வு உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது, இது இயற்கை விவசாயத்தின் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும். இது நமது பண்ணைகளை ரசாயனமற்றதாக மாற்றுவது மட்டுமின்றி கங்கை புத்துயிரூட்டல் பிரச்சாரம் புதிய பலம் பெறும். 2030 ஆம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும் இலக்கில் இந்தியா செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் அப்போது தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.