காஷ்மீரில் தீ விபத்தில் ஒரு காலை இழந்தாலும் 2 கி.மீ தூரம் தினமும் ஒற்றை காலில் பள்ளி செல்லும் மாணவன்

ஹந்த்வாரா: காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியைச் சேர்ந்த மாணவர் பர்வேஸ். நவ்காம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளி யில் 9-ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதில் ஒரு தீ விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார். எனினும், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் கொஞ்சம் கூட தணியாதவராக இருக்கிறார். விபத்தில் ஒரு காலை இழந்தாலும், ஒரு கால் போதும். தொடர்ந்து படிப்பேன் என்று உறுதியாக இருந்தார். அதற்காக தினமும் 2 கி.மீ. தூரம் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று வர தொடங்கினார்.

இந்த விடா முயற்சி குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் 14 வயது பர்வேஸ் கூறும்போது, ‘‘எனது ஒரு காலிலேயே 2 கி.மீ. தூரம் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று வருகிறேன். ஆனால், பள்ளிக்கு செல்லும் சாலைதான் சரியில்லை. எனக்கு செயற்கை கால் கிடைத்தால், என்னாலும் நடந்து செல்ல முடியும். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கனவுடன் இருக்கிறேன்’’ என்றார்.

பர்வேஸ் மேலும் கூறும்போது, ‘‘காஷ்மீர் சமூக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் எனக்கு சக்கர நாற்காலி வழங்கினர். ஆனால், பாழடைந்த சாலையில் சக்கர நாற்காலியில் சென்று வருவது மிக சிரமமாக இருந்தது. அதனால்,ஒரு காலிலேயே நடந்து சென்று வருகிறேன். இரண்டு கி.மீ. தூரம் நடந்து பள்ளி சென்றடையும் போது, உடல் முழுக்க வேர்த்து விடும். எனினும் பள்ளி சென்றதும் பிரார்த்தனை செய்வேன். எனக்குகிரிக்கெட், கைப்பந்து, கபடி போன்ற விளையாட்டுகள் பிடிக்கும். எனது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள அரசு உதவும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். மருத்துவராக வேண்டும் என்பது எனது விருப்பம். அந்த இலக்கை அடைவதற்கான நெருப்பு என் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது’’ என்றார்.

என நண்பர்கள் 2 கால்களுடன் நடந்து செல்வதை பார்க்கும் போது, என்னால் அதுபோல் முடியாமல் போனதே என்று வேதனை அடைந்திருக்கிறேன். ஆனால், அல்லா எனக்கு எல்லா பலத்தையும் தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு சரியான செயற்கை கால் வழங்க வேண்டும் என்று அரசை வேண்டுகிறேன். அல்லது பள்ளி சென்று வர மாற்று போக்குவரத்து ஏற்பாடு செய்து தந்தாலும் நல்லது என்று பர்வேஸ் கூறுகிறார். இவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.