முதல்கட்டமாக 210 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த, ரூ.300 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது.
புதுச்சேரி, லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்கு முதல் விமான சேவை 7.1.2013ல் தொடங்கப்பட்டது.இங்குள்ள ஓடுதளம் 1,502 மீட்டர் மட்டுமே கொண்டது. இதில் தற்போதைக்கு ஏடிஆர்-48, ஏடிஆர்-78, க்யூ-400 போன்ற சிறு விமானங்கள் மட்டுமே வந்து செல்ல முடியும்.

விரிவாக்கம் அவசியம்

ஓடுதளம் 3,300 மீட்டர் நீளம் இருந்தால்தான் பெரிய ரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதற்காக கூடுதலாக 1,800 மீட்டர் நீளத்திற்கு ஓடுதளம் அமைக்க 294 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.அதனால், விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளான விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவைச் சேர்ந்த மொரட்டாண்டி, ஆரோவில் பகுதியில் கூடுதல் நிலம் ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசிடம் கோரிக்கை

இது தொடர்பாக புதுச்சேரி அரசு தமிழக அரசிடம் பேசி, நில ஆர்ஜிதப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.அதன்பேரில், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு தேவைப்படும் 294 ஏக்கர் நிலப்பரப்பில், முதற் கட்டமாக 190 ஏக்கர் நிலம் தமிழக அரசு மூலம் கையகப்படுத்தப்பட உள்ளது.புதுச்சேரி பகுதியில் 20 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது.இதில் 10 ஏக்கர் பரப்பளவை லாஸ்பேட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சொந்தமான இடத்தினை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 ஏக்கர் நிலம் தனியார் இடத்தை கையகப்படுத்தப்பட உள்ளது.

ரூ.300 கோடி தேவை

விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்த, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக வழங்க 300 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிதியை விரைந்து வழங்கினால், விமான நிலைய விரிவாக்க பணியை உடனடியாக மேற்கொள்ள முடியும் என, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் புதுச்சேரி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.நிதி ஒதுக்கப்பட்டதும் விரைவாக விரிவாக்க பணிகளை ஆரம்பிக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு உள்ளது. புதுச்சேரிக்கு நிதி ஆதாரமாக இருப்பது சுற்றுலாத் துறை. இங்குள்ள அழகிய கடற்கரை, புராதன கோயில்கள், பிரெஞ்சு கலாசாரத்தை பிரதிபலிக்கும் கட்டடங்கள் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளன.வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் மாநில வளர்ச்சிக்கு வித்திடும்.இதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் பயனடைவர் என்பதால், விரிவாக்கம் தொடர்பான பணிகளை முழு வீச்சில் அரசு முடுக்கி விட்டுள்ளது.

திட்டத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு புதுச்சேரி பகுதியில் 20 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில், லாஸ்பேட்டை பசுமை மக்கள் நல வாழ்வு சங்கம், இத்திட்டத்தை மாற்றி அமைத்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:விமான நிலையத்தையொட்டி புதுச்சேரி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி உள்ளன. ஏர்போர்ட் விரிவாக்கப் பணியால், அவர்கள் ஆசையாக கட்டிய வீட்டினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதில் பலர் வயதானவர்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை மீண்டும் வீடு கட்டி ஆரம்பிப்பது என்பது இயலாத காரியம்.எனவே யாரையும் பாதிக்காத வகையில் புதுச்சேரி பகுதியில் இடம் கையகப்படுத்துவதை இந்திய விமான நிலைய ஆணையம் கைவிட்டு, அதற்கு பதிலாக தமிழக பகுதியில் குடியிருப்பு இல்லாத தரிசு பகுதிகளை கையகப்படுத்தலாம். இதன் மூலம் வீடுகளை இழக்க உள்ள குடும்பங்கள் காப்பாற்றப்படும். இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.