அவல் கொழுக்கட்டை, கார்ன் ஃப்ரை, ஓட்ஸ் லட்டு… சிம்பிள் வீக் எண்டு ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் ரெசிப்பீஸ்

தினமும் சாப்பிடுவதற்கு விதவிதமாகக் கேட்கிறார்கள். ஆனால், “கொளுத்தும் வெயிலால், கொட்டும் வியர்வையில் கிச்சனில் சேர்ந்தாற்போல அரைமணி நிற்க முடியவில்லை. இதில் எங்கே பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது?” என்று அங்கலாய்க்கும் அம்மாக்களுக்காக பதினைந்தே நிமிடங்களில் எளிதில் செய்யக்கூடிய ஹெல்த்தி ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளின் செய்முறைகள் இங்கே.

இந்த வார வீக் எண்டை குட்டீஸ் சமையலோடு சேர்த்துக் கொண்டாடுங்கள்.

அவல் கொழுக்கட்டை

தேவையானவை:

சிவப்பு அவல் – ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு

ஊறவைத்த கடலைப்பருப்பு –

ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)

ஊறவைத்த கறுப்பு உளுந்து –

ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)

உப்பு – தேவையான அளவு

அவல் கொழுக்கட்டை

செய்முறை:

சிவப்பு அவலைச் சுத்தம் செய்து தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து மஸ்லின் துணியைப் பயன்படுத்தி தண்ணீரைப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அவலுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, ஊறவைத்த கடலைப்பருப்பு, ஊறவைத்த உளுத்தம்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் இவற்றைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

தேவையானவை:

ஸ்வீட் கார்ன் – ஒரு கப்

சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன்

மைதா – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு

காஷ்மீர் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

கிரிஸ்பி கார்ன் ஃப்ரை

செய்முறை:

ஸ்வீட் கார்ன் முத்துகளைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் மைதா மற்றும் சிறிது உப்பு சேர்த்து பேஸ்ட் போலக் கலக்கவும். இதை வேகவைத்துள்ள ஸ்வீட் கார்ன் முத்துகளுடன் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். பின்னர் இந்த ஸ்வீட் கார்ன் கலவையை மீதமுள்ள சோள மாவில் புரட்டி எடுக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி சோள மாவில் புரட்டி எடுத்த ஸ்வீட் கார்ன்களை லேசான பொன்னிறம் வரும்வரை பொரித்தெடுக்கவும். பின்னர் பொரித்த இந்த ஸ்வீட் கார்னின் மேல் காஷ்மீரி மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் மற்றும் உப்பு தூவி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு:

ஸ்வீட் கார்னை சோள மாவில் புரட்டும்போது ஸ்வீட் கார்னில் அதிகப்படியாக ஒட்டியிருக்கும் சோள மாவை நீக்கிவிட்டு பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

மசாலா மேட் ஆங்கிள்ஸ்

தேவையானவை:

அரிசி மாவு – ஒரு கப்

தண்ணீர் – அரை கப்

காஷ்மீரி மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

தண்ணீரில் உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். அரிசி மாவில் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கலவையை சப்பாத்தி மாவுப் பதத்துக்குக் கலந்து சப்பாத்தி வடிவத்தில் தேய்த்துக்கொள்ளவும். ஒரு முள்கரண்டியால் சப்பாத்தியை ஆங்காங்கே துளையிடவும். அப்போதுதான் பொரிக்கும்போது குமிழ்கள் வராது.

பின்னர் இந்த சப்பாத்தியை சிறிய, சிறிய முக்கோண வடிவங்களாக நறுக்கிக்கொள்ளவும். பின்பு இவற்றை சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்தவற்றின் மேல் உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

ஓட்ஸ் அண்டு டேட்ஸ் லட்டு

தேவையானவை:

ஓட்ஸ் – ஒரு கப்

கொட்டை நீக்கிய பேரீச்சை – அரை கப்

ஐசிங் சுகர் – ஒரு டேபிள்ஸ்பூன்

காய்ச்சிய பால் – 3 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

அடுப்பைக் குறைவான தீயில்வைத்து ஓட்ஸை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். பேரீச்சையைப் பொடியாக நறுக்கி, பொடித்த ஓட்ஸுடன் சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஏலக்காய்த்தூள், ஐசிங் சுகர் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பாலை இக்கலவையில் சேர்த்து ரவா லட்டு பிடிப்பதைப் போல உருண்டைகளாகப் பிடிக்கவும். லட்டுகளை பொடியாக நறுக்கிய பேரீச்சைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.