உ.பியில் ரூ.1,500 கோடியில் தெற்காசியாவின் பெரிய ராணுவ தளவாட வளாகம் – அதானி குழுமம் கையெழுத்து

புதுடெல்லி: அதானி குழுமம் ரூ.1500 கோடி முதலீட்டில் உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய ராணுவத் தளவாட தயாரிப்பு வளாகத்தை அமைக்க உள்ளது. 250 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த வளாகம் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ராணுவத் தளவாட தயாரிப்பு வளாகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடு தொடர்பாக உத்தர பிரதேச விரைவு தொழில் மேம்பாட்டு ஆணையம் (யுபிஇஐடிஏ) மற்றும் அதானி குழுமத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கடந்த 6-ம் தேதி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அப்போது இருதரப்புக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கான்பூரில் உள்ள ராணுவ தொழில்பேட்டை திட்ட உருவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த வளாகம் அமைய உள்ளது. இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான அதிநவீன சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படும் என்றும் இவை உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு மூலம் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, லக்னோ முதலீட்டாளர் மாநாட்டில் அதானிக்கு ஒருங்கிணைப்பாளராக அமர்த்தப்பட்ட உத்தர பிரதேச நகர்ப்புற வளர்ச் சித்துறை சிறப்புச் செயலாளரான தமிழர் அன்னாவி தினேஷ் குமார் ஐஏஎஸ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

சரக்குகளை வைப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதானி குழுமம் உத்தர பிரதேச அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. உள்நாடு மற்றும் ஏற்றுமதியைக் கருத்தில் கொண்டு ஆயுதங்கள் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த 1,500 தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அன்னாவி தினேஷ் குமார் கூறினார்.

இதுவரையில் அதானி குழுமம் உத்தர பிரதேசத்தில் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.