நுபுர் சர்மா விவகாரம்; ராஞ்சியில் வன்முறை; துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவர் உட்பட இருவர் பலி

Abhishek Angad 

Boy awaiting Class X results among 2 killed in Ranchi, police face probe: சனிக்கிழமை அதிகாலையில் மற்றொரு நபர் தோட்டாக் காயங்களால் இறந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இறந்தவர்கள் 20 வயதான சாஹில் என்றும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த 15 வயது முடாசிர் ஆலம் என்றும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் ஹேமந்த் சோரன் அரசு, தற்போது கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் நபிக்கு எதிரான கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது காவல்துறை “துப்பாக்கிச் சூடு” நடத்திய சம்பவம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட எஸ்.பி நௌஷாத் ஆலம் தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “சுமார் 13 பேர் காயமடைந்தனர், சிலர் கல் வீசியதில், சிலருக்கு புல்லட் காயங்கள் ஏற்பட்டன. மாநகர எஸ்.பி சரியான தகவல்களைக் கொடுப்பார்” என்று கூறினார். ஆனால் மாநகர எஸ்.பி.,யிடம் கருத்து பெற முடியவில்லை.

ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸின் (RIMS) கண்காணிப்பாளர் டாக்டர் ஹிரேந்திர பிருவா கூறுகையில், “கும்பல் வன்முறையின் போது புல்லட் காயம் அடைந்த 10 பேர் RIMSல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மீதமுள்ளவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிகிறது,” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆய்வு விவகாரம்; அறநிலையத்துறை புதிய அறிவிப்பு

வன்முறையின்போது, எஸ்.எஸ்.பி சுரேந்திர ஜா தலையில் காயம் ஏற்பட்டது. ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுக்கும் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.

“வதந்திகள்” பரவியதைத் தொடர்ந்து அரசாங்கம் இணையத்தை முழுமையாக முடக்க உத்தரவிட்டது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை எப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ கிளிப்புகள் காட்டுகின்றன.

விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜே.எம்.எம் செய்தித் தொடர்பாளர் சுப்ரியோ பட்டார்ச்சார்யா தெரிவித்தார். மேலும், “சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில் இருந்து போலீசார் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது முதல் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறை தோல்விக்கு வழிவகுத்தது வரை, ஒவ்வொரு கோணமும் விசாரிக்கப்படும். இருப்பினும், நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்,” என்று கூறினார்.

பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலர் அமிதாப் கவுஷல், ஜார்கண்ட் காவல்துறை ஏ.டி.ஜி சஞ்சய் லத்கர் ஆகியோர் அடங்கிய இரண்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது என்று அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. ஏழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அந்த குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாநில பாஜக தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான தீபக் பிரகாஷ் தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம், “நிகழ்வுகளின் முழு நிலைமையும் மாநில அரசின் முழுமையான தோல்வி” என்று கூறினார்.

இதற்கிடையில், இரண்டு RAF படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன, மேலும் வன்முறை நடந்த மெயின் ரோடு பகுதியைச் சுற்றியுள்ள 12 இடங்களில் 2,000 க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அப்பகுதி அமைதியாக இருந்தது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாஹல் மற்றும் முடாசிரின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முன்னாள் வார்டு கமிஷனரும் சாஹிலின் பக்கத்து வீட்டுக்காரருமான சலாவுதீன் கூறுகையில், “சாஹில் இடைநிலை வகுப்புகள் வரை படித்துவிட்டு மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். அவரது தந்தை ஒரு ஆட்டோ டிரைவர், குடும்பம் பெரிய அதிர்ச்சியில் உள்ளது. அவருக்கு வயிற்றில் குண்டு காயம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அரசிடம் இழப்பீடு கோரியுள்ளோம். யாருடைய உத்தரவின் பேரில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கேள்வி எழுப்பியுள்ளோம்” என்று கூறினார்.

இறந்த இரண்டாவது நபர் 15 வயதான முடாசிர் ஆலம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்தார். அவரது மாமா முகமது சாஹித் அய்யூபி கூறுகையில், “அரசாங்கம் எங்கள் விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான காரணம் என்ன, அதுதான் காவல்துறையின் ஒரே வழியா? அரசு பதில் சொல்ல வேண்டும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “அவர் (முடாசிர்) எப்படி கும்பலின் ஒரு பகுதியாக மாறினார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் தலையில் சுடப்பட்டது. அவரது தந்தை கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார், அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தை. இழப்பீடு கேட்டுள்ளோம்,” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.