யூரோ டூர் 40: செல்வச் செழிப்பும், மகிழ்ச்சியும் மட்டுமா ஐரோப்பா? தற்போதைய சவால்களும் பிரச்னைகளும்!

ஐரோப்பா என்றாலே நம் நினைவுக்கு வருவது எல்லாமே பிரகாசமான பக்கங்கள். உலக அரங்கில் பலமும் அதிகாரமும் பெற்ற முக்கிய வல்லரசுகள் பல ஐரோப்பாவில் அங்கம் வகிக்கின்றன. மூன்றாம் உலக நாடுகள் கடனில் மூழ்கினால் ஐரோப்பா கை தூக்கி விடுகிறது. புகலிடம் தேடும் அகதிகள், கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கத் தேர்ந்தெடுக்கும் முதல் சாய்ஸ் ஐரோப்பிய நாடுகள். ஏன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் கூட ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்து வேலை செய்ய விரும்புகிறார்கள். அப்படியாயின் ஐரோப்பா என்றாலே ஆனந்தம்தானா? இவர்களுக்கு பிரச்னைகளே இல்லையா?

மனிதன் வாழும் எந்த இடத்திலும் பிரச்சனைகள் இருக்கும் என்பது எழுதப்படாத விதி. அது ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி. என்னதான் உலகின் செல்வங்களையும் சந்தோஷங்களையும் கொட்டிக் கொடுத்தாலும் அங்கே மனிதன் ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி, எதிர் குழுவோடு அடித்துக்கொள்ளுவான். அப்படி இல்லை என்றால் தன் குழுக்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளுவான். ஐரோப்பா மட்டும் இதில் விதிவிலக்காகி விடுமா என்ன?

Europe | ஐரோப்பா

காலநிலை பிரச்னை, Brexit விலகல், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வருகை, ஸ்பெயினைத் தாக்கிய கடும் வேலையில்லா திண்டாட்டம், ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தம், மைக்ரோசிப் நெருக்கடி என தொடர்ச்சியாக ஏதாவது ஒரு நெருக்கடி ஐரோப்பாவைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் ஐரோப்பாவில் புதிதாகத் தலைவிரித்தாடும் பிரச்னை எரிபொருள் நெருக்கடி. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போகும் இயற்கை எரிவாயு விலைகள் ஐரோப்பியர்க்கு கடும் அச்சத்தைக் கொடுத்துள்ளன.

எரிவாயு நெருக்கடி

வரலாறு காணாத உச்சத்துக்குச் சென்றுள்ள எரிவாயு விலை நெருக்கடி, 2022-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவலிகளில் ஒன்றாகத் தொடர்கிறது. ஏற்கெனவே அதிக எரிசக்தி விலைகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகங்களால் தத்தளித்து வரும் நிலையில், ஐரோப்பியத் தலைவர்கள் அமெரிக்கா, வளைகுடா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து மாற்று எரிசக்தி ஏற்றுமதி முறைகளைக் கண்டுபிடிக்க தலைகீழாக நின்று முயற்சி செய்கிறார்கள்.

Fuel (Representational Image)

சரி, இந்தப் பிரச்னை எங்கிருந்து தொடங்கியது என்று சுருக்கமாகப் பார்க்கலாம். 2020-ல் கோவிட் தொற்று உலகைப் பாதித்த போது எல்லா நாடுகளும் தம் எல்லைகளை மூடிக்கொண்டன. விநியோக சங்கிலி இதனால் பெருமளவு பாதித்தது. ஐரோப்பாவுக்கான எரிபொருள் விநியோகமும் இதனால் குறைந்தது. ஐரோப்பாவில் குளிர்காலம் மிகக் கடுமையானது. வின்டர் காலங்களில் தம் வீடுகளை வெப்பமாக்க, ஐரோப்பா மக்கள் அதிகளவான எரிசக்தியைப் பயன்படுத்துவதால், விநியோக அளவு குறைந்து, தேவை கூடியது. இதனால் அப்போதே விலையும் மெல்ல மெல்ல ஏற ஆரம்பித்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், எரிபொருள் விலை விண்ணை முட்டியது.

இதற்கும் ரஷ்யாவுக்கும் என்ன சம்பந்தம்?

ஐரோப்பா பொதுவாக அதன் இயற்கை எரிவாயு பயன்பாட்டில் 40% ரஷ்யாவையே சார்ந்துள்ளது. ஒரு சில சிறிய நாடுகள் 90-100 சதவிகிதம் மொத்தமாகவே ரஷ்யாவைச் சார்ந்தே இருக்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவில் அப்போதே உருவாகியிருந்த எரிசக்தி நெருக்கடிக்கும் ஆரம்பத்தில் எந்தத் தொடர்பும் இல்லாமல்தான் இருந்தது. உக்ரைன் – ரஷ்யா போர் ஆரம்பித்த போது முதலில் அமெரிக்கா, ரஷ்யா மீது தடைகளை விதித்து அவர்களிடம் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்ய மாட்டோம் என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஐரோப்பாவும் ரஷ்யாவுக்குத் தடைவிதிக்கிறோம் பேர்வழி என்ற பெயரில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவை இந்த வருட இறுதிக்குள் நிறுத்தப் போவதாக அறிவித்தது.

ரஷ்யா – உக்ரைன் போர்

ரஷ்யாவின் வங்கிக்கணக்குகளை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கி, ஸ்விப்ட்டில் இருந்தும் ரஷ்யாவைத் தூக்கியது. அப்படியென்றால் ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் எரிவாயுக்கு அமெரிக்க டாலரிலும் யூரோவிலும் செலுத்தும் பணத்தை ரஷ்யா பயன்படுத்த முடியாதபடி ஆனது. ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா’ என அதற்குப் பதிலடியாக, தன்னிடம் வாங்கும் எரிபொருளுக்கு இனிமேல் ரஷ்யன் ரூபிள்களில் மட்டும்தான் பணம் செலுத்த வேண்டும் என்று பதிலுக்கு ஆப்பு வைத்தது ரஷ்யா.

ரஷ்ய எரிவாயு கொள்முதல்களுக்கு ரூபிள்களில் பணம் செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துவிட்டதால் ஐரோப்பிய நாடுகளுக்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் கெஸ்ப்ரோம் (Gazprom Bank) வங்கியில் இரண்டு கணக்குகளைத் திறக்க வேண்டும் என்றும், ஒன்று வெளிநாட்டு நாணயத்திலான கணக்காகவும், மற்றொன்று ரூபிளில் செலுத்தப்படும் கணக்காகவும் காணப்படும் என்றும், யூரோவில் அல்லது வேறு நாணயத்தில் கொடுப்பனவைச் செலுத்தும் போது அந்தக் கணக்கிற்கு வந்த பணம் ரூபிள்களாக மாற்றப்படும் என்றும் ரஷ்யா கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து ரூபிளில் பணம் செலுத்த மறுத்த போலந்து, பல்கேரியா போன்ற நாடுகளுக்கான எரிவாயு விநியோகங்களை ரஷ்யா முற்றிலுமாகத் துண்டித்தது.

ரஷ்யா எரிவாயுவை நிறுத்துவதால் உடனடி ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் வரும் காலங்களில் இதனால் பெரிய நெருக்கடி நிலை ஏற்படும் எனக் குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றியம், அதற்கான மாற்றீடுகளை தேட ஆரம்பித்துள்ளது. இருந்தாலும் இந்த நெருக்கடி ஐரோப்பாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. எரிவாயு விலைகள் ஐரோப்பாவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா தொடர்ந்து எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால், எதிர்வரும் குளிர்காலத்தில் ஐரோப்பியர் மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். நீண்ட காலத்திற்கு இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற ஐரோப்பா என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது அவர்களது அவர்கள் முன் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்!

உக்ரைன் மக்கள்

அகதிகள் அதிகரிப்பு

அதேபோல ஐரோப்பா எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கிய பிரச்னை அகதிகளின் வருகை. 2019-ம் ஆண்டில் 125,000க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பாவிற்குக் கடல் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ சென்றுள்ளனர் என்று சமீபத்திய UNHCR புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையின் படி 2021-ம் ஆண்டில், புகலிடக் கோரிக்கையாளர்கள் சுமார் 140 நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குள் வந்துள்ளனர் என்றும் 2021-ல் 535,000 முதல் முறை விண்ணப்பங்கள் உட்பட 630,500 விண்ணப்பங்கள் EU-ல் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், 2020 உடன் ஒப்பிடுகையில் 33% அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறது.

ஐரோப்பியத் தலைவர்கள் எல்லாருமே தமது தேர்தல் வாக்குறுதியில் முதலாவதாகக் குறிப்பிடுவது, புகலிடக் கோரிக்கையாளர்களைக் குறைப்போம் அல்லது முற்றாக நிறுத்துவோம் என்பதே. இது இப்படி இருக்கையில் ஐரோப்பாவைத் தக்கியிருக்கும் அடுத்த பெரிய சுனாமி உக்ரைன் அகதிகள். ஆரம்பத்தில் இவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடிக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் தற்போது மெல்ல மெல்லப் பின்வாங்கத் தொடங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஆறு மில்லியனுக்கும் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் போலந்து போன்ற அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தாலும் அதிகளவானோர் மேற்கு ஐரோப்பாவை நோக்கியும் படையெடுக்கின்றனர்.

உக்ரைன் மக்கள்

நாட்டிலிருந்து வெளியேறும் உக்ரேனியர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம், அதன் 27 உறுப்பு நாடுகளில் மூன்று ஆண்டுகள் வரை தங்கி பணியாற்றுவதற்கான ஒரு சலுகையை வழங்கியுள்ளது. அவர்களுக்கு சமூக நலன், வீடு, மருத்துவச் சிகிச்சை மற்றும் பள்ளிகளுக்கான அணுகலையும் வழங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான அகதிகளைப் பெற்ற போலந்து அரசாங்கம், அங்கு வரும் மக்களின் எண்ணிக்கையைச் சமாளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தற்போது வழங்கும் கொடுப்பனவை விட அதிகப் பணம் தேவைப்படும் என்று கூறியுள்ளது. அகதிகள் அதிக அளவில் உள்ள மால்டோவா எண்ணிக்கையைக் கையாள்வதில் சர்வதேச உதவியையும் கோரியுள்ளது. போலந்து, மால்டோவா மட்டுமல்ல, எல்லா நாடுகளுமே கிட்டத்தட்ட இதே விஷயத்தை முணுமுணுக்கத் தொடங்கியுள்ளன.

காலநிலையில் பாதகமான மாற்றங்கள்

ஐரோப்பா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகச் சுற்றுச்சூழல் மாசு என்னும் பெரும் பூதம் கிளம்பியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய கவலைகள் உலகம் முழுவதும் பரவலாக உள்ள ஒரு பொதுப்பிரச்னை என்றாலும் ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது சிறந்த காலநிலையையும், சூழலியல் சமநிலையையும், கடும் சட்டதிட்டங்களையும் கொண்டிருந்த ஐரோப்பா கடும் பருவநிலை மாற்றத்திற்கு முகம் கொடுத்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் அடிக்கடி வெப்ப அலைகள், காட்டுத் தீ மற்றும் வறட்சிகள் ஏற்படுகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியும் வறட்சி மற்றும் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடியதாக மாறி வருகிறது. மாறாக வடக்கு ஐரோப்பாவில் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து வருகிறது. 5 ஐரோப்பியர்களில் 4 பேர் வசிக்கும் நகர்ப்புற பகுதிகளில், கனமழை மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. வெப்ப அலைகள் அதிகரிப்பு, கடல் மட்டம் உயர்தல் மற்றும் வெள்ள அபாயங்களும் அதிகரித்து உள்ளன. ஆனால் இந்தக் குழப்பமான காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க போதுமான வசதிகள் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. காலநிலை மாற்றம் ஏற்கெனவே மனித ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஐரோப்பாவில் இறப்புகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பல தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்கள் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கப் போராடுகின்றன என்பதும் பெரிய பிரச்னையாகி உள்ளது. உலக சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போனால், சில தாவர மற்றும் விலங்கு இனங்கள் முற்றாக அழிந்துவிடும் என அஞ்சப்படுகின்றது.

காலநிலை மாற்றம்

உயரும் விலைவாசியும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவும் பணவீக்கமும்!

அதிகரித்து வரும் நுகர்வோர் விலைகள் ஐரோப்பாவில் வளர்ந்து வரும் மற்றுமொரு பிரச்னையாகும். மக்கள் அடிப்படை மளிகை சாமான்கள் வாங்குவதையே இது மிகவும் கடினமாக்கி உள்ளது. ஏற்கெனவே COVID-19 தொற்றுநோயின் ஆழத்திலிருந்து மீண்டு வரும் பொருளாதாரங்கள் தமது உற்பத்தி மற்றும் விற்பனை விலைகளை அதிகரித்துள்ளன. 2000 முதல் 2022 வரை சராசரியாக 1.98 சதவிகிதமாக இருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பணவீக்க விகிதம், 2022 மார்ச்சில் 7.80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது. சமீபத்தில் போடப்பட்ட சீனாவின் பெரிய லாக்டௌனும் ஐரோப்பியச் சந்தையில் பொருள்களுக்கான விநியோகத்தைக் குறைத்து தேவையை அதிகரித்ததால், விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

வேலையில்லா திண்டாட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் அலுவலகமான Eurostat வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, ஐரோப்பாவில் வேலையின்மை விகிதம் பிப்ரவரி 2022-ல் 6.3% ஆகவும், மார்ச் 2022-ல் 7.5% ஆகவும் உயர்ந்துள்ளது என்கிறது. குறிப்பாகக் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரிக்கும் வேலையின்மை காரணமாக, பலர் மேற்கு ஐரோப்பா நோக்கிப் படையெடுக்கின்றனர். அதேபோல பிரெக்ஸிட்டிற்குப் பிறகு ஐரோப்பாவில் வேலையில்லா திண்டாட்டம் கூடுதலாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

வேலைவாய்ப்பு

ஐரோப்பாவின் இருண்ட முகம்

உலகம் அறியாத இருள் சூழ்ந்த ஒரு மறுபக்கம் ஐரோப்பாவிலும் உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து என ஹைடெக் நாடுகள் கோலோச்சும் ஐரோப்பாவின் மறு பக்கம் யாரும் அறிந்து கொள்ள விரும்பாத அவலம். அவை கிழக்கு ஐரோப்பிய நாடுகள். ஐரோப்பா என்னும் பிரமிப்பான பிம்பத்தை அப்படியே தூள் தூளாக உடைக்கின்றன இந்த நாடுகள். அடி வாங்கும் பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, மட்டுப்படுத்தப்பட்ட கல்விக்கான அணுகல், படிப்பறிவின்மை, அதி உயர் குற்ற எண்ணிக்கை, போதை பாவனை, குழந்தைத் தொழிலாளர், ஆட்கடத்தல், விபச்சாரம், ஊழல் அரசாங்கம், மக்களைச் சுரண்டும் அரசியல்வாதிகள், ஏமாற்று நிறுவனங்கள், பின்தங்கிய மருத்துவ சுகாதார சேவைகள், மோசமான போக்குவரத்து உட்கட்டமைப்பு என உலகின் அத்தனை இருட்டறைகளையும் கொண்ட ஐரோப்பாவின் அதிர்ச்சியூட்டும் அவல முகங்கள் இனி வரும் சில அத்தியாயங்களில்…

யூரோ டூர் போலாமா?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.