கொடுங்கையூர் லாக்அப் மரணம்.. 5 காவலர்கள் சஸ்பெண்ட்.!!

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அப்பு என்கின்ற ராஜசேகர். இவர் பல்வேறு திருட்டு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். ராஜசேகர் மீது சோழவரம், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்கேபி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 27 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

இதனிடையே கொடுங்கையூர் காவல் துறையினர் நேற்று முன்தினம் ஒரு திருட்டு வழக்கில் விசாரிப்பதற்காக ராஜசேகரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். நேற்று காலை அவரிடம் இருந்து திருட்டு நகைகளை பறிமுதல் செய்வதற்காக காவல்துறை ராஜசேகரை வெளியே அழைத்து வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை காவல்துறையினர் கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார்.

இதையடுத்து காவல்துறையினர் சேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்து ராஜசேகரின் உறவினர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த  சம்பவம் அறிந்து காவல் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கொடுங்கையூரில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக ஐந்து காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராஜசேகர் மீது ஏற்படும் 27 குற்ற வழக்குகள் உள்ளது. விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார். ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையின் கடமை. ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.