ஓ.பி.எஸ் அடுத்த ‘மூவ்’: ஆதரவு தலைவர்களுடன் டெல்லி பயணம்

OPS next move and reason for Delhi visit: அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்புகளுக்குப் பிறகு, டெல்லி செல்கிறார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை வானரகத்தில் இன்று காலை நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் அல்லது எந்த முடிவும் எடுக்கப்படாமல் சலசலப்புடன் முடிந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மீண்டும் கூடும் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.,வின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

இதையும் படியுங்கள்: அ.தி.மு.க கதை முடியும் தருவாயில் ஓ.பி.எஸ்ஸை வீழ்த்திய இ.பி.எஸ்

இந்த அறிவிப்பை தொடர்ந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எதிர்ப்பு தெரிவித்து மேடையில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார். முன்னதாக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்-க்கு எதிராகவும், இ.பி.எஸ்-க்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஓ.பி.எஸ் மேடையிலிருந்து வெளியேறும்போது, அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இப்படியாக இன்று அ.தி.மு.க பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் தமிழ்நாட்டின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு பின் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இல்லங்களுக்கு தனித்தனியே சென்று, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் தனித்தனியே சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, ​​ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-இடம் பா.ஜ.க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் கூட்டணி கட்சியினர் அங்கு இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்பதால் அ.தி.மு.க தலைவர்கள் டெல்லிக்கு வரவேண்டுமென அண்ணாமலை மற்றும் சிடி ரவி கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். விமான நிலையம் செல்லும் வழியில் டெல்லி பயணம் ஏன்? ஒற்றைத்தலைமை குறித்து விவாதிக்கவா? என ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஓ.பன்னீர் செல்வம், இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை நாளை பா.ஜ.க சார்பாக போட்டியிடும் திரவுபதி முர்மு தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கலின்போது வருகை புரியுமாறு பா.ஜ.க தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கிறேன் என்று கூறினார்.

ஒற்றை தலைமை விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களுடன் ஏதேனும் பேச உள்ளீர்களா?, பா.ஜ.க தலைவர்கள் இன்று உங்களைச் சந்தித்தார்களே இது குறித்து எதேனும் கூறுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு ஓ.பி.எஸ் பதில் அளிக்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.