திண்டுக்கல், கொடைக்கானல் வனப் பகுதியில் 16,000 ஹெக்டேரில் அந்நிய மரங்களை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல், கொடைக்கானல் வனப்பகுதிகளில் மொத்தம் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் அந்நிய மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அகற்றும் பணி விரைவில் துவங்க உள்ளது.

தமிழகத்தில் வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற தமிழக அரசு ரூ.536 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக சத்தியமங்கலம், ஆனைமலை, முதுமலை, தர்மபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் உள்ள வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர்.

மண்டல வாரியாக வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்கள் கணக்கெடுப்பு பணி வனத்துறை அலுவலர்களை கொண்டு துவக்கப்பட்டது. திண்டுக்கல் மண்டலத்திற்குட்பட்ட திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் வனப்பகுதியில்

யூகலிப்டஸ், சீமைக்கருவேல மரம் உள்ளிட்ட அந்நிய மரங்கள் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு கூறுகையில், “தமிழக அரசு உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில் அந்நிய மரங்களை கண்டறியும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. திண்டுக்கல் மண்டலத்திற்குட்பட்ட திண்டுக்கல் வன மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் ஹெக்டேரில் அந்நிய மரங்கள் வளர்ந்துள்ளன.

இவற்றை அகற்றுவதற்கு அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான நிதி வரப்பெற்றபின் அந்நிய மரங்களை திண்டுக்கல் வனப்பகுதிகளில் இருந்து அகற்றும் பணி துவங்க உள்ளது, என்றார்.

கொடைக்கானல் வன உயிரின காப்பாளரும், கொடைக்கானல் மாவட்ட அலுவலருமான திலிப் இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறுகையில், “கொடைக்கானல் மலைப் பகுதியில் எந்தெந்த பகுதியில் அந்நிய மரங்கள் வளர்ந்துள்ளது என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எட்டாயிரம் ஹெக்டேர் பரப்பில் அந்நிய மரங்கள் வளர்ந்துள்ளது கண்டறியப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 100 ஹெக்டேர் பரப்பில் அவற்றை அகற்றும் பணியை விரைவில் துவங்க உள்ளோம். படிப்படியாக கொடைக்கானல் மலை வனப்பகுதியில் இருந்து அந்நிய மரங்கள் முற்றிலுமாக அகற்றப்படும்.

அகற்றிய அந்நிய மரங்கள் வலுவில்லாமல் இருக்கும் என்பதால் விறகு போன்ற பயன்பாட்டிற்கு தான் பயன்படுத்த முடியும். அகற்றிய மரங்களை என்ன செய்வது என்பது குறித்து அரசு வழிகாட்டுதலை பெற்று செயல்படுத்தப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.