அரசு விழாவில் இந்துமத பூஜைக்கு எதிர்ப்பு – செந்தில்குமார் எம்பியின் கொந்தளிப்பும் எதிர்வினையும்

சென்னை: அரசு விழாவில் இந்துமத முறைப்படி பூஜை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமாரின் செயலுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியை தருமபுரி திமுக எம்.பி., செந்தில்குமார் இன்று தொடங்கிவைக்க வந்திருந்தார். பொதுப் பணித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பூமி பூஜையில் அர்ச்சகரை வைத்து இந்துமுறைப்படி பூஜை செய்யத் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை கண்ட எம்பி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பகிர்ந்த அவர், “ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள்” என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த வீடியோவில், “அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூஜைகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு கொடுத்த பின்னரும், பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஏன்” என அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. கிறிஸ்டியன் ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி. இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக்கூடாது” என்று கூறி அதிகாரிகளிடம் கடுமை காட்டிய எம்பி செந்தில்குமார், அங்கிருந்த பூஜை பொருட்களை உடனடியாக அகற்றிய பின்னரே தொடங்கிவைத்தார்.

இந்தக் காணொளி வைரலாக, வரவேற்பு எதிர்ப்பு என எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, “அரசு நிகழ்ச்சிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற எம்பி செந்தில்குமாரின் துணிச்சல்மிகு செயல்பாடு பாராட்டத்தக்கது” என்று பாராட்டியுள்ளார். இன்னும் சிலர் ட்விட்டரில் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

— K.NavasKani MP (@KNavaskani) July 16, 2022

அதேநேரம், எதிர்ப்புகளும் பதிவாகியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், “இது தேவையற்ற கோபம். நல்ல நேரம் பார்க்காமல் நடந்த உங்கள் கட்சி உறுப்பினர்களின் யாராவது ஒருவர் திருமணமோ அல்லது பதவியேற்பு விழா போன்ற வேறு சடங்குகளை சொல்ல முடியுமா. மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால் அனைத்து வகையான சடங்குகளையும் மறுப்பதாக திராவிடத்தை பின்பற்றுபவர்கள் தவறாக நினைக்கின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக துணைப் பொதுச்செயலாளர் நாராயணன் திருப்பதியும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு எம்பியின் சிறுபிள்ளைத்தனமான செயல் இது. பூஜை செய்வது என்பது பணியாற்றுபவர்களின் நம்பிக்கைகாக, அரசுக்காக அல்ல. பூஜையில் திக-வினர் எங்கே என்று கேட்பது வன்மத்தின் வெளிப்பாடு. அந்த அதிகாரி ஒரு இஸ்லாமியராக இருந்திருந்து, பணி தொடங்கும் முன் இஸ்லாமிய வழக்கப்படி தொழுதிருந்தால் கண்டித்திருப்பாரா? தைரியம் இருந்திருக்குமா. ஓவ்வொரு மதத்திலும் வழிபாட்டு முறைகள் மாறுபடும் என்ற பொது அறிவு உள்ளவர்கள், இது போன்று தகாத முறையில், அநாகரீகமாக நடந்து கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இமாம்கள் எங்கே? பாதிரியார் எங்கே? திராவிடர் கழகத்தினர் எங்கே? அவர்கள் அனைவரும் இல்லாமல் ஹிந்து மத வழக்கப்படி மட்டும் பூஜை போடுவது சரியா? என்று கேட்கிறார் எம்பி செந்தில்குமார். மசூதிகள் எங்கே? சர்ச்சுகள் எங்கே? தி க வின் சொத்துக்கள் எங்கே? அவைகள் அனைத்தையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமல் ஹிந்து கோவில்களை மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது சரியா? என கேட்பாரா செந்தில் குமார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.