75 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்கு சென்ற 92 வயது மூதாட்டி

லாகூர்,

இந்தியாவில் வசித்து வரும் 92 வயது மூதாட்டி ரீனா சிபார். இவரது பூர்வீக வீடு ஒன்று பாகிஸ்தான் நாட்டில் உள்ளது. 75 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு ரீனா சென்றுள்ளார்.

நல்லெண்ண நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்த மூதாட்டிக்கு பாகிஸ்தானிய தூதரகம் 3 மாத கால விசா வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் ராவல்பிந்தி நகரில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற தனது பூர்வீக வீட்டுக்கு வாகா-அட்டாரி எல்லை வழியே நேற்று ரீனா புறப்பட்டு சென்றார்.

பாகிஸ்தானின் ராவல்பிந்தி நகரில் இவரது குடும்பம் வசித்து வந்துள்ளது. பிரிவினைக்கு முன்பு பன்முக கலாசார தன்மையுடன் கூடிய சமூகம் பிந்தியில் இருந்தது என நினைவுகூர்கிறார் ரீனா.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது 1947ம் ஆண்டில் ரீனாவின் குடும்பம் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தது. அப்போது அவருக்கு வயது 15. இதுபற்றி ரீனா கூறும்போது, எனது மனதில் இருந்து பூர்வீக வீடு, அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் தெருவாசிகளை நீக்க முடியாது என கூறியுள்ளார்.

எனது சகோதரிகளுக்கு தோழிகள் இருந்தனர். அவர்களில் முஸ்லிம்கள் உள்பட பல சமூகத்தினரும் எங்களது வீட்டுக்கு வந்துள்ளனர். எங்களது வீட்டு பணியாள் கூட பல்வேறு இன மக்களை சேர்ந்தவர்கள் ஆவர் என கூறியுள்ளார்.

கடந்த 1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு செல்ல ரீனா விசாவுக்கு விண்ணப்பித்து உள்ளார். ஆனால், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே போரால் பதற்றம் நிறைந்த சூழல் காணப்பட்டது. இதனால், அவரால் அனுமதி பெற முடியவில்லை.

இந்த நிலையில், நாங்கள் சென்று, திரும்பி வருவதற்கு ஏற்ற வகையில் இரு நாடுகளும் விசா நடைமுறைகளை தளர்த்துவதற்கான பணிகளை ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்று ரீனா வலியுறுத்தி உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.