அதிமுக முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க திமுக அரசு அனுமதி – குட்கா வழக்கில் இனி..?

முந்தைய அதிமுக ஆட்சியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதாக செய்திகள் பரபரத்தன. அந்த சூழலில், குட்கா வியாபாரி மாதவ ராவ் ரூ.240 கோடி வரி ஏய்ப்பு செய்த வழக்கில், சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மாதவ் ராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் 2016-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது, வருமான வரித்துறையினரிடம் ஒரு டைரி சிக்கியது. அதில், அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலருக்கும் ரூ.39.91 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

சி.விஜயபாஸ்கர்

மேலும், சென்னை மாநகர காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி-க்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர்களும் கலால்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் பெயர்களும் லஞ்சம் பெற்றவர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த விவகாரம், அ.தி.மு.க அரசுக்கு எதிராக புயலைக் கிளப்பியது.

அது தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. பின்னர், அது சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர், ரமணா, டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உட்பட 35 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று செய்திகள் வெளியாகின.

ஜார்ஜ்

இந்த வழக்கில், செங்குன்றம் கிடங்கு உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர், குப்தா, கலால் துறை அதிகாரி பாண்டியன், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், திருவள்ளூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது. விஜயபாஸ்கர், ரமணா ஆகியோரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. பின்னர் வியாபாரிகள் இருவர், காவல்துறை அதிகாரிகள் இருவர், கலால் துறை அதிகாரிகள் இருவர் என ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் பெயர்களும் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று சி.பி.ஐ தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த வாரம் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர். அதில், குட்கா வழக்கில் தொடர்புடைய விஜயபாஸ்கர், ரமணா, டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உட்பட 12 பேர் மீது குற்றவியல் நடவடிக்கையைத் தொடர அனுமதி கோரப்பட்டிருந்தது. மேலும், குட்கா வழக்கு தொடர்பாக, மற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.

குட்கா ஊழல்

இந்த நிலையில், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகையைப் பதிவுசெய்யவும், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் தமிழ்நாடு அரசு தற்போது சி.பி.ஐ-க்கு அனுமதி அளித்திருக்கிறது. அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் குட்கா விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தி.மு.க வலிமையாகக் குரல் கொடுத்த பிறகுதான், இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், குட்கா வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும், அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை சி.பி.ஐ கையிலெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின், விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்தார். ‘குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என்று விஜயபாஸ்கரை ஸ்டாலின் சாடினார்.

ஸ்டாலின்

விராலிமலை தான் விஜயபாஸ்கரின் தொகுதி. அங்கு, தி.மு.க சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, “மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை யார் மறந்தாலும், நான் மறக்க மாட்டேன். `குட்கா புகழ் விஜயபாஸ்கர்’ என நான்தான் பட்டம் கொடுத்தேன். அவர் பிறந்த ஊருக்கும், அவரைத் தேர்ந்தெடுத்த இந்தத் தொகுதிக்கும் கெட்ட பெயரை மட்டும்தான் அவர் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்” என்று ஸ்டாலின் விளாசினார்.

தற்போது, தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டதால், விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை சி.பி.ஐ விரைவுபடுத்தும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. குட்கா வழக்கு தொடர்பாக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு டி.ஜி.பி கடிதம் ஒன்றை எழுதியதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அது தொடர்பாக, வருமான வரித்துறையின் புலனாய்ப்பிரிவு அதிகாரியான சுகீ பாபு வர்கீஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் இடம்பெற்றிருந்த விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

விராலிமலையில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

அந்த பிரமாணப்பத்திரத்தில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் சோதனையிட்டபோது, அமைச்சர் விஜயபாஸ்கரும், சில மூத்த காவல்துறை அதிகாரிகளும் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக முதல்வருக்கு முன்னாள் டி.ஜி.பி எழுதிய கடிதம் கிடைத்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இந்த வழக்கில் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 நபர்களைத் தாண்டியும் விசாரணை வளையம் நீளலாம் என்றும், அதற்கு முன்பாக விஜயபாஸ்கர் மீதான சி.பி.ஐ பிடி இருகும் என்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.