‘இந்தி திணிப்பு’ என்று கூறி ஏமாற்றுகிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

சென்னை: இந்தி திணிப்பு என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டு, இன்னொரு மொழியைக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை.

மொழித் திணிப்பு என்று கூறி அரசியல் செய்யாமல், கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கக் கூடிய நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவிக்காமல், அவற்றைத் திறக்க முன்வரவேண்டும்” என்று கூறியிருந்தார்.

விமர்சனத்துக்கு விளக்கம்

தமிழசை சவுந்தரராஜனின் இந்தக் கருத்துக்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் கடந்த 23-ம் தேதி “பதவி மோகத்தால் தமிழிசை, இந்தியிசை ஆகலாமா?” என்ற தலைப்பில் விமர்சனக் கட்டுரை வெளியிட்டது.

இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்து தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழச்சியான எனக்கு, எந்த கருத்தையும் கூறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு. நான் ஆளுநராக இருக்கும் தெலங்கானாவில் இயங்கிவரும் நவோதயா பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 முதல் 80 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு மூலமாக மருத்துவராகும் வாய்ப்பும், உயர் கல்வி வாய்ப்பும் கிடைக்கிறது.

ஏழைக் குடும்பத்து பிள்ளைகள் நவோதயா பள்ளியில் படிப்பதால், நீட் தேர்வு மூலம் மருத்துவராகின்றனர். குறைவானக் கட்டணத்தில், உயர்ந்த கல்வி பெற நவோதயா பள்ளிகள் சேவைபுரிகின்றன.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல குழந்தைகள், நவோதயா பள்ளிகளில் படித்து, வாழ்க்கையில் முன்னேறுவதை நான் நேரில் பார்த்து வருகிறேன். ஏழை மாணவர்கள் பயன்பெறக்கூடாது என்பதற்காகவே, இந்தி திணிப்பு என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இல்லாத ஒன்றை, மக்கள் மீது திணிக்க வேண்டாம்.

புதுச்சேரி மாடல்

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்தோம். இதுதான் “புதுச்சேரி மாடல்”. இந்த “புதுச்சேரி மாடல்” என்று சொல்வதுதான், நீங்கள் சொல்லும் மாடல்களுக்கு எல்லாம் உதாரணமாக வருங்காலத்தில் இருக்கப்போகிறது. இவ்வாறு அறிக்கையில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.