வெள்ளை, சிவப்பு நிற கொடியுடன் குதிரைகளில் அணிவகுக்கும் ராணுவ படை – குடியரசுத் தலைவர் பாதுகாப்புக்கான சிறப்பு பிரிவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்ற திரவுபதி முர்முவை சூழ்ந்தபடி நேற்று குடியரசு தலைவர் பாதுகாப்பு படையின் பிபிஜி வீரர்கள் அணி வகுத்தனர். இந்திய ராணுவத்தின் மிகவும் பழமையான மற்றும் மூத்த பிரிவான பிபிஜி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து பாரம்பரியமாக தொடர்கிறது.

கடந்த செப்டம்பர் 1773-ல் ஜிஜிபி (கவர்னர் ஜெனரல் பாடிகார்டு) என்ற படையை அமைத்தவர், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன்ஹேஸ்டிங்ஸ். ஈஸ்ட் இந்தியா கம்பெனி அதிகாரியான இவர் உயரதிகாரிகளின் பாதுகாப்புக்காக, முகலாயர் படையின் 50 குதிரைகள் மற்றும் சிர்தார் சமூகத்தை சேர்ந்த வீரர்களை கொண்ட படையை உருவாக்கினார். கடந்த 1960-ல் இப்படையில் முதல் வீரர்களாக சிர்தார் ஷாபாஸ் கான், சிர்தார் கான் தார் பேக் ஆகியோர் பயிற்சி பெற்றனர். இப்படைக்கு பனாரஸின் (தற்போதைய வாரணாசி) மகாராஜாவாக இருந்த ராஜா சேத் சிங் மேலும் 50 குதிரைகளை கொடுத்து ஜிஜிபியை வலுவாக்கினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு ஜிஜிபி, இரண்டாகப் பிரிந்து, ‘பிரிசிடெண்ட் பாடிகார்ட் (பிபிஜி) என்ற பெயரில் இந்தியக் குடியரசு தலைவருக்கான சிறப்பு பாதுகாப்பு படையாக செயல்படுகிறது. மற்றொரு பிரிவு, பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிபிஜியின் இப்பிரிவில் மொத்தம் 600 வீரர்கள் மட்டுமே இருப்பார்கள். சரியாக 6 அடி உயரத்தில் உள்ள நல்ல உடல்வாகு கொண்ட வீரர்கள் இப்படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள் செல்லும் குதிரைகளுக்கும் சில தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் ஒரு பிரிவாகச் செயல்படும் பிபிஜி, மிகவும் உயரியதாகவும், திறமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. நாட்டின் 2-வது குடியரசு தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்த போது, பிபிஜிக்கு எனத் தனியாக ஒரு சின்னம் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இப்படைக்கு 7 உயதிகாரிகள் தலைமை வகிக்கின்றனர். 15 இணை அதிகாரிகள் மற்றும் 180 பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 600 பேருடன் பிபிஜி செயல்படுகிறது.

குதிரையில் அணிவகுக்கும் பிபிஜி வீரர்கள் கைகளில் வைத்திருக்கும் ஈட்டிகளின் மேல்முனையில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கொண்ட கொடி இருக்கும். இவற்றில் வெள்ளை நிறம் சமாதானத்தையும் சிவப்பு நிறம் வீரத்தையும் உணர்த்துவதாக கூறுகின்றனர். இப்படைக்கான வீரர்கள் பெரும்பாலும் பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ஜாட், ராஜ்புத் மற்றும் சீக்கிய ஜாட் பிரிவைச் சேர்ந்தவர்கள். மற்ற பிரிவைச் சேர்ந்தவர்களும் இப்படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.