“என் வாழ்க்கையை அசலாக படமாக்குவார் இயக்குநர் த.செ. ஞானவேல்!” – Dosa King படம் குறித்து ஜீவஜோதி

ஜீவஜோதி, தன் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 18 வருடங்கள் சட்டப்போராட்டம் நடத்தி கொலைக்குக் காரணமான ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தவர். பரபரப்புகள் நிறைந்த அவரது வாழ்க்கை சம்பவம் ’Dosa king’ என்ற பெயரில் படமாககிறது. ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேல் படத்தை இயக்குவதாக வெளியாகியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு, படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி

ஹோட்டல் தொழிலில் புகழ்பெற்று திகழ்ந்தவர் சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால். அவர் தன் கணவர் சாந்தகுமாரை கொலை செய்து விட்டதாக புகார் அளித்து தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியவர் ஜீவஜோதி. கணவரின் கொலைக்கு நீதி கேட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். வழக்கை வாபஸ் பெற வைப்பதற்காக மிரட்டப்பட்டபோதும் அஞ்சவில்லை. கோடிகளில் பணம் தருவதாக பேரம் பேசப்பட்டபோதும் அவர் மசியவில்லை.

தனி ஒரு பெண்ணாக பெரும் சட்டப் போராட்டத்தை தொடர்ந்தவர், கணவர் கொலைக்கு காரணமான ஹோட்டல் சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தந்தார். ’‘கொலை முதல் வழக்கு நடைபெற்ற காலம் வரை சினிமாவை விஞ்சக்கூடிய பரபரப்புகள் கொண்டதாகவே அமைந்தது என் வாழ்க்கை’’ என்று ஜீவஜோதி அடிக்கடி கூறுவதுண்டு.

ஜீவஜோதி

தற்போது தஞ்சாவூரில் தன் அம்மா, இரண்டாவது கணவர் தண்டபாணி, மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார் ஜீவஜோதி. அரசியலில் தடம் பதித்தவர் தற்போது பா.ஜ.கவில் மாநில மகளிரணி செயலாளராக பதவி வகித்து வருவதுடன் கட்சி பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுப்படுத்திக் கொண்டுள்ளார். பல துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு சத்தமில்லாமல் நேசக்கரம் நீட்டி வருகிறார்.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த ஜங்லி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம், ஜீவஜோதி வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் இயல்பு மாறாமல் படமாக்கியதில் வெற்றி கண்ட ’ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல், ஜீவஜோதி வாழ்க்கை படத்தை இயக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சூர்யா படம் உள்ளிட்ட சில பணிகள் இருக்கிறது என்றும், அதனை முடித்த பிறகு Dosa King படத்தை இயக்க மும்பை செல்ல இருப்பதாகவும் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.

சூர்யாவுடன் த.செ.ஞானவேல்

இது குறித்து ஜீவஜோதியிடம் பேசினோம். ‘’கடந்த சில வருடங்களாகவே என் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தானது. தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொலை, அது தொடர்பான சட்டப்போராட்டம் என என் வாழ்க்கையில் நடந்த பரபரப்புகள் நிறைந்த சம்பவங்களை கேட்டு திரைக்கதையை தயார் செய்துள்ளனர்.

தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவம் என்பதால் சிறந்த தமிழ் பட இயக்குநர் இந்த படத்தை இயக்கினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதிய தயாரிப்பு நிறுவனம், பெரும் வெற்றி பெற்ற ’ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேலிடம் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது. பேச்சு வார்த்தை முடிந்த பிறகு அறிமுகத்திற்காக என்னிடம் பேச வேண்டும் என ஞானவேல் தெரிவித்துள்ளார்.

ஜீவஜோதி

இதையடுத்து தயாரிப்பு தரப்பு அதற்கான ஏற்பாட்டை செய்தது. ஸூம் மீட்டில் பேசினோம். நான் என்ன வேலைபார்க்கிறேன், குடும்பம் என அனைத்தையும் அக்கறையுடன் விசாரித்தார். ’விமர்சனங்களை கண்டுக்காம தீர்ப்புக்காக தைரியமாக போராடியிருக்கீங்க’ என்று பாராட்டினார். ‘தன்னம்பிக்கையை விட்டுடாதீங்க’ என்று மோட்டிவேட் செய்தார். ‘ஜட்ஜ்மென்ட் காப்பியை படிச்ச பிறகு டவுட், கிளாரிஃபிகேஷனுக்காக திரும்பவும் பேசுறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ’படம் தொடர்பா எதுவாக இருந்தாலும் கேளுங்க, தேவையான உதவிகளை செய்து தர்றேன்’ என்று கூறினேன்.

நல்ல இயக்குநர் கையில கதையை ஒப்படைப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் காத்திருந்தது. அது தற்போது நடந்திருக்கிறது. ’ஜெய்பீம்’ படத்தில் உண்மை சம்பவத்தை யதார்த்தமாக எடுத்திருந்தார் இயக்குநர் த.செ.ஞானவேல். என் வாழ்க்கையும் அதேபோல் அசலாக படமாகும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. கற்பனை கதையல்ல நிஜக்கதை என்பதாலும், ஏழு ழொழிகளில் வெளியாக இருப்பதாலும் எல்லா இடத்திற்கும் பொதுவான ஒரு முகம் தேவைப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே ஹீரோயின் தேர்வு இருக்கும் எனக் கூறியுள்ளனர்.

கணவர் கொலைக்கு நீதி கேட்டு 18 வருடங்கள் போராட்டம் நடத்தினேன். எந்த இடத்திலும் பின் வாங்காமல் உறுதியாக இருந்து தண்டனை பெற்று தந்தேன். இந்த வழக்கில் என்ன நடந்தது என எனக்கும், அதில் தொடர்புடையவர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் மட்டுமே தெரியும்.

வானதி சீனிவாசன் – ஜீவஜோதி

அப்படியிருக்கையில் சரியான புரிதல் இல்லாமலும், ஒரு பெண்ணான என் பக்கம் இருக்கும் நியாயத்தை உணராமலும் என் மீது பலர் விமர்சனங்களை வைத்தனர். அவை இப்போது வரை ஓயவில்லை. தவறான கமென்ட்ஸ் வருவதும் தொடர்கிறது.

என் வாழ்க்கை படமாக வெளிவரும்போது என் மீதுள்ள தவறான பார்வை நீங்கும் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கிறேன்.108 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு, இரண்டரை மணி நேர சினிமாவாகிறது. உண்மை சம்பவம், உண்மையாக வெளிவருவதற்கான நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.