கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: கைதான 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில் சின்னசேலம் போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது‌. பின்னர் இந்தவழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளிச் செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவி 3 வது மாடியில் இருந்து குதித்திருந்தால் எந்த விதமான தாக்கங்கள் உடலில் ஏற்பட்டிருக்கலாம், கீழே குதிக்கும்போது மரக்கிளையில் மோதுகிறதா உள்ளிட்டவைகளை அறிய மாணவி எடைக்கு நிகரான எடையளவு கொண்ட பொம்மையை மாடியில் இருந்து கீழே போட்டு சோதனை நடத்தி பார்த்தனர்.

மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் இவ்வழக்கு தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவர் புஷ்பராணி முன்பு சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இன்று நடுவர் புஷ்பராணி இம்மனு மீதான விசாரணை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, ”கைது செய்யப்பட்டவர்களை ஒரு நாள் காவலில் வைத்து நாளை பிற்பகல் 12.30க்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என்று நடுவர் புஷ்பராணி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.