பிரிட்டன் பிரதமர் ரேஸ்: ரிஷி சுனக்குக்கு டஃப் கொடுக்கும் லிஸ் ட்ரஸ்… யார் இவர்?!

பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான இறுதிச்சுற்றில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸும் மோதிக் கொள்கின்றனர். முதல் ஐந்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முன்னிலை வகித்தாலும், அவருக்கு டஃப் கொடுத்தது லிஸ் ட்ரஸ்தான். யார் இவர்?

ரிஷி சுனக் Vs லிஸ் ட்ரஸ்

யார் இந்த லிஸ் ட்ரஸ்?

47 வயதாகும் லிஸ் ட்ரஸ், 1975-ம் ஆண்டு, இங்கிலாந்தின் வடக்குப் பகுதியிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு நகரில் பிறந்தவர். ஆக்ஸ்ஃபோர் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள மெர்ட்டன் கல்லூரியில், அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றார். படிக்கும்போதே `லிபரல் டெமாக்ரட்’ கட்சியின் இளைஞரணியில் சேர்ந்தார் லிஸ். 1996-ம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி, கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்தார். 1996 முதல் 2000-ம் ஆண்டு வரை உலகப் புகழ்பெற்ற எண்ணெய், எரிவாயு நிறுவனமான `ஷெல்’ நிறுவனத்தின் பொருளாதாரப் பிரிவில் பணியாற்றினார். அதன் பிறகு சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர், நேரடி அரசியலிலும் களமிறங்கினார்.

எதிர்க்கட்சியான `தொழிலாளர் கட்சி’யின் கோட்டையான மேற்கு யார்க்‌ஷையர் பகுதியில்தான் லிஸ் வாழ்ந்துவந்தார். 2001 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டார். அந்தப் பகுதியிலுள்ள ஹெம்ஸ்வொர்த் (Hemsworth) தொகுதியில் நின்ற லிஸ், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வியுற்றார். இருந்தும், அந்தத் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்கு வங்கி முன்பைவிட 4 சதவிகிதம் அதிகரித்திருந்தது. 2005 நாடாளுமன்றத் தேர்தலில், மேற்கு யார்க்‌ஷையரின் மற்றொரு தொகுதியான கால்டர் வேலி (Calder Valley) தொகுதியில் போட்டியிட்டு வென்றார் லிஸ். அப்போதிலிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார். பிரிட்டனின் முதல் பெண் பிரதமரான மார்கெரட் தாட்சர்தான் (Margaret Thatcher) லிஸ் ட்ரஸ்ஸின் ரோல் மாடல்!

liz truss

2012-ம் ஆண்டு முதல் உணவு, குழந்தைகள் நலம், சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குச் செயலாளராக இருந்திருக்கிறார் லிஸ். 2019-ம் ஆண்டு, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில், பெண்கள், சமத்துவத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2021 செப்டம்பர் மாதத்தில், பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சரானார். ரஷ்யா – உக்ரைன் போரில், உக்ரைன் பக்கம் நின்று, ரஷ்ய அதிபர் புதினுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார். மேலும், ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதித்ததில், இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகியதிலும் முக்கிய பங்காற்றினார் லிஸ் ட்ரஸ். இவர், பிரிட்டனின் இடைக்காலப் பிரதமராக இருந்துவரும் போரிஸ் ஜான்சனின் தீவிர விசுவாசி என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரதமர் பதவிக்கான ரேஸில், லிஸ் ட்ரஸ் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமிருப்பதாகத் தெரிகிறது. “எம்.பி-க்கள் மத்தியில் நடத்தப்பட்ட முதல் ஐந்து சுற்றுகளிலும் ரிஷி சுனக் முன்னிலை வகித்தார். ஆனால், இறுதிச்சுற்றில் கன்சர்வேட்டிவ் கட்சியின் 2,00,000 உறுப்பினர்கள் வாக்களிக்கப் போகின்றனர். கட்சி உறுப்பினர்கள் மத்தியில், ரிஷியைவிட லிஸ் ட்ரஸ்ஸுக்கே ஆதரவு அதிகம்” என்கின்றனர் பிரிட்டன் அரசியல் பார்வையாளர்கள்.

லிஸ் ட்ரஸ்

பிரதமர் ரேஸுக்கான இறுதிச்சுற்றின் முடிவுகள் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகின்றன. ஒருவேளை லிஸ் ட்ரஸ் இந்த ரேஸில் வெற்றிபெற்றால், பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறுவார். சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் லிஸ் ட்ரஸுக்கு சாதகமாகவே வந்திருக்கின்றன. `லிஸ் ட்ரஸ்தான் பிரிட்டனின் அடுத்த பிரதமரா?’ என்ற கேள்விக்கான விடை செப்டம்பர் 5-ம் தேதி தெரிந்துவிடும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.