அன்டார்டிகாவில் மட்டுமே காணப்படும் அரிய வகை லைட் மேண்டல் அல்பட்ரோஸ் பறவை: ராமேசுவரத்திற்கு வந்தது எப்படி? 

ராமேசுவரம்: பூமியின் துருவப் பகுதியான அன்டார்டிகா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய லைட் மேண்டல் அல்பட்ரோஸ் பறவை முதன்முறையாக ஆசியாவில் ராமேசுவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்டார்டிகாவை பூர்வீகமாகக் கொண்ட லைட் – மேண்டல் அல்பட்ரோஸ் (light-mantled albatross) என்ற கடற்பறவை மன்னார் வளைகுடா கடற்பகுதியான ராமேசுவரத்தில் உள்ள அந்தோணியார்புரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஜர்னல் ஆஃப் த்ரட்டண்டட் டாக்ஸாவில் (Journal of Threatened Taxa) என்ற சர்வதேச ஆய்விதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையை அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியலில் மேம்பட்ட அறிவியல் மையத்தின் பேராசிரியர்கள் பிஜு மற்றும் மற்றும் இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை சேர்ந்த எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

மன்னார் வளைகுடா கடற்பகுதி பறவைகளின் வலசை வருவதற்கு ஏற்றப் பகுதியாக உள்ளது. இந்த லைட் மேண்டல் அல்பட்ரோஸ் பறவை 08.09. 2020 அன்று ராமேசுவரத்தில் உள்ள அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் காணப்பட்டுள்ளது. அந்தோணியார்புரம் மீனவர்கள் அந்தப் பறவையை முதன்முறையாக பார்த்த போது பறக்க முடியாமல் களைத்துப் போயிருந்தாகவும், மீனவர்களும், வனத்துறையினர் பறவையை பராமரித்து, தண்ணீர் மற்றும் தீவனம் அளித்து மீண்டும் விடுவித்துள்ளனர்.

இந்த பறவை ஆசியாவில் காண்பது இதுவே முதல்முறை என்றும், இதனை உறுதி செய்ய இந்தியா முழுவதும் சரிபார்ப்பு பட்டியல்கள் மற்றும் சர்வதேச சக மதிப்பாய்வுக்கு உட்படுத்த செய்யப்பட்டதாகவும் அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் துருவப் பகுதியான அன்டார்டிகா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய லைட் மேண்டல் அல்பட்ரோஸ் பறவை 6000 கிலோ மீட்டர் தாண்டி ராமேசுவரத்திற்கு வந்த காரணம் மர்மமாகவே இருப்பதாகவும், கடல் நீரோட்ட திசை, புயல் போன்ற காரணங்களால் அவை திசைமாறி இங்கு வந்திருக்கலாம் எனவும் இரு ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.