புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும் – அண்ணா பல்கலையில் மோடி உரை

அண்ணா பல்கலைகக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வியாழக்கிழமை (ஜூலை 28) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.

இதைத் தொடந்து, பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (ஜூலை 29) அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தில் துறை வாரியாக முதலிடம் பெற்ற 69 மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பட்டம் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

இதையடுத்து, பட்டமளிப்புவிழாவில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக்கொள்கை மூலமாக மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும் என்று கூறினார்.

பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் வாழ்த்துகள். மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் இது முக்கியமான நாள். ஏனெனில், அவர்கள்தான் இளைஞர்களை உருவாக்குகிறார்கள். தேசத்தை கட்டமைப்பவர்கள் அவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மாறலாம். ஆனால், ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள்.

இளைஞர்களின் சாதனைகளை கொண்டாட நாம் இங்கு கூடியிருக்கிறோம். இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள். இந்திய இளைஞர்கள் மீது இந்த உலகமே நம்பிக்கை வைத்திருக்கிறது.

‘இளைஞர்களே எனது நம்பிக்கை’ என்று சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றைக்கும் பொருந்தும். அது போல, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை அப்துல் கலாம். அவரது சாதனைகள் இன்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறது.

கொரோனா பெருந்தொற்று எதிர்பாராத ஒரு சம்பவம். நூறாண்டுக்கு வரும் ஒரு சோதனை இப்போது வந்துவிட்டது. அதிலிருந்து மீள உதவிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி.

ஒரு வலுவான அரசால் எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், தனது கொள்கைகளால் மக்களை வழிநடத்திச் செல்ல முடியும். மக்களின் பங்களிப்புக்கு அதிக முக்கியத்துவத்தை வலுவான அரசால் மட்டுமே கொடுக்க முடியும். அந்த வகையில், புதிய கல்விக்கொள்கை மூலமாக மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும்.

இந்தியாவில் ஒவ்வொரு துறையும் வளர்ந்து வருகிறது. செல்போன் தயாரிப்பில் கடந்த ஆண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கும் மாணவர்களுக்குமான காலம். மாணவர்களின் கற்றலே இந்தியாவின் கற்றல். மாணவர்களின் வெற்றியே, இந்தியாவின் வெற்றி, மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி.

உங்களுடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் தீட்டும்போது இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து தீட்டுகிறீர்கள்.

அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருப்பது உங்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய பெருமை – மு.க. ஸ்டாலின்

அண்ணா பல்கலைக் கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “கையில் பட்டத்துடனும் – கண்களில் கனவுகளோடும் அமர்ந்திருக்கக் கூடிய மாணவ, மாணவியர் அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காஞ்சி தந்த வள்ளுவன் – பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இது. பேரறிஞர் அண்ணா மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது சுட்டிக் காட்டியதை உங்கள் அனைவர்க்கும் நான் நினைவூட்டக் கடமைப் பட்டுள்ளேன். பட்டம் பெற்றுள்ளீர்கள், பாராட்டுக்கு உரியவர் ஆகின்றீர்கள்? இந்த பட்டம் யாருக்காக? உங்களுக்காகவா? நாட்டுக்காகவா? உங்களுக்காக மட்டுமல்ல, நாட்டுக்காக!

தமிழ் உமது முரசமாகட்டும், பண்பாடு உமது கவசமாகட்டும். அறிவு உமது படைக்கலனாகட்டும். அறநெறி உமது வழித்துணையாகட்டும். உறுதியுடன் செல்வீர். ஊக்கமுடன் பணிபுரிவீர், ஏற்றமிகு வெற்றியினை ஈட்டிடுவீர்” – என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சொன்னதைத் தான் உங்கள் அனைவர்க்கும் நான் எடுத்துக் காட்டிச் சொல்ல விரும்புகிறேன்.

இந்தப் பட்டத்தோடு உங்களது படிப்பு முடியவில்லை. அடுத்த பட்டத்தை நோக்கி உயருங்கள். பட்டங்கள் என்பவை, வேலை வாய்ப்புக்காக மட்டுமல்ல, உங்களது அறிவாற்றலை மேம்படுத்துவதற்காக என்பதை மறக்காதீர்கள்.

அத்தகைய அறிவுலக வாழ்க்கையில் எப்போதும் உங்களை நீங்களே ஒப்படைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு பட்டம் வழங்கும் விழாவுக்கு இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் முதன்மை விருந்தினராக வருகை தந்துள்ளார்கள். இது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை ஆகும்.

‘நான் பட்டம் வாங்கும் போது இந்தியப் பிரதமரே வந்திருந்தார்கள்’ என்று உங்களது எதிர்காலப் பிள்ளைச் செல்வங்களிடம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்துள்ளது. இத்தகைய பெருமைகளோடு எதிர்காலத்துக்குள் நீங்கள் நுழைகிறீர்கள்.

அறிவாற்றல் தான் அனைத்திலும் வலிமையானது என்பதை உணருங்கள். சாதி – மதம் – பணம் – அதிகாரம் – வயது – அனுபவம் – குடும்பம் – பதவி – நாடுகள் – வளர்ச்சி – ஆகிய அனைத்தின் தன்மையும் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம், நாட்டுக்கு நாடு வேறு படுகிறது.ஆனால் அறிவு மட்டும் தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலோடு அளவிடப் படுகிறது.

கல்வி என்பது தான் யாராலும் திருட முடியாத, பறிக்க முடியாத சொத்து ஆகும். அதனால் தான், படிப்புக்கு மட்டும் எத்தகைய தடைக்கல்லும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால் தான் இன்றைய ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு அரசானது, கல்விக் கண்ணைத் திறப்பதையே பெரும்பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

திராவிட இயக்கத்தின் முழுமுதல் கொள்கையான சமூகநீதிக்கு அடிப்படை என்பதே கல்வி தான். அனைவரும் படிக்க வேண்டும், அனைவரும் வேலைவாய்ப்பை பெற வேண்டும், எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. அதற்காகவே சமூகநீதித் தத்துவமும் தோன்றியது. அனைவர்க்கும் கல்வி – அனைவர்க்கும் கல்லூரிக் கல்வி – அனைவர்க்கும் உயர் கல்வி – அனைவர்க்கும் ஆராய்ச்சிக் கல்வி – என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

படிப்பு என்பதை பட்டத்தோடு மட்டுமே சுருக்கி விடாமல் – வேலை வாய்ப்பு – வாழ்க்கைத் தரம் – சமூக வளர்ச்சி – ஆகிய படிநிலையில் உயர்த்தும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். படித்து முடித்து வெளியில் வருபவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உடனுக்குடன் உருவாக்கித் தருகிறோம். இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருக்கிறோம்.இதன் மூலமாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன.

அதனால் தான் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது தமிழ்நாடு. புதிய புதிய தொழில்களை ஈர்ப்பதாக தமிழக அரசு தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஓராண்டில், செமி-கண்டக்டர்கள், மின் வாகனங்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள், ஒருங்கிணைந்த சூரிய ஒளி மின்ன ழுத்திகள் (Solar Photovoltalc) உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) போன்ற துறைகள் சார்ந்த திட்டங்கள், தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

இதற்கு தேவையான அறிவுத் திறனை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இதற்கு தேவையான அறிவுத் திறனை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். ஆண்டுதோறும் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 10 இலட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கு வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்து, அவர்களின் திறமையை அவர்களுக்கு உணரவைத்து, அதன் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவே நன்மை பெற்றிடும் வகையில், இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி (Industry 4.0)க்கு ஏற்ப, நமது இளைஞர்கள், பணியாளர்கள் தயாராக வேண்டும். தொழிற்சாலைகளையும் தரம் உயர்த்த வேண்டும். அதற்கான தொழில் புத்தாக்க மையங்களைத் (Industrial Innovation Centres) உருவாக்கி வருகிறோம்.

2026-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அதில் நீங்களும் இடம்பெற்றுள்ளீர்கள்.

அதேபோல, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறேன். அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும்.

எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய உலகத்தை உருவாக்க நீங்களும் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை அனைத்து வகையிலும் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது வளர்ச்சிக்குத் தடையாக எது இருந்தாலும் அதனை தகர்த்து முன்னேற்றம் காணுங்கள். உங்களது கனவுகளை மட்டுமல்ல, உங்களது பெற்றோர் கனவுகளும் நிறைவேற்றுங்கள்.

உங்களிடம் இருந்து இந்த மாநிலமும், இந்திய நாடும் நிறைய எதிர்பார்க்கிறது. எனது மாணவ,மாணவியர்க்கு அன்பான வாழ்த்துகளும் – அறிவான பாராட்டுதல்களும் எப்போதும் உண்டு.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி. முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.