விழுப்புரம்: பழுதால் அதிர்ந்த பாலம்; அச்சமடைந்த வாகன ஓட்டிகள்- துரித நடவடிக்கையை உறுதிசெய்த ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஆற்றுப்பாலம் பலவீனமான நிலையில் இருப்பதாக சமூக ஊடகங்களின் வாயிலாக வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 30 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலத்தின் நடுவே, குறிப்பிட்டப் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டிருக்கிறது. இதனால், வாகனங்கள் செல்லும்போது அந்தப் பாலம் அதிர்வுகளுடன் லேசாக ஊசலாடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில், இந்தப் பாலத்தின் அருகே வேகத்தடுப்புகளை வைத்து வாகன ஓட்டிகளிடம் பாலத்தை மெதுவாக கடந்து செல்லும்படி அறிவுறுத்தி வந்தனர் போலீஸார்.

சேதமடைந்த பாலம்

இதற்கிடையே இன்றைய தினம் அந்தப் பாலத்தை நேரில் சென்று பார்வையிட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், பாலத்தில் ஏற்பட்டிருக்கும் பழுதை விரைந்து சரிசெய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், “இந்தப் பாலம் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் இருக்கிறது. துறை சார்ந்த நிபுணர்களிடம் விசாரித்தபோது, 15 நாள்களுக்கு முன்பாகவே இந்தப் பாலத்தில் ஆய்வு பணி மேற்கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவந்தது. கான்கிரீட் ஸ்லாப்களைத் தாங்கி நிற்கும் தூண்களுக்கு இடையே வைக்கப்படும் ஸ்ப்ரிங், பியரிங் நழுவியிருப்பதாகவும், இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். ஆனால், கட்டமைப்பின் அடிப்படையில் பார்த்தால் பாலம் நல்ல நிலையில்தான் இருக்கிறது என்று தெரிவித்தனர். தற்போது, சற்று நகர்ந்துவிட்டதாகக் கூறப்படும் ஸ்ப்ரிங்கை சரி செய்வதற்கான பணி மும்முரமாக தொடங்கியிருக்கிறது.

இந்தப் பணியை செய்து முடிக்க 10 முதல் 15 நாள்கள்வரை ஆகும் என துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்தப் பணியை கண்காணிப்பதற்கு வருவாய் அலுவலர் ஒருவரையும் நியமித்திருகிறோம். நாங்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வோம். பணி முடிந்ததும், பொறியாளர் குழு மூலம் பாலத்தின் ஸ்திரத்தன்மையை ஆராய்ந்தவிட்டு, அதன் பிறகே பாலம் வழியே பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதிப்போம்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு, போக்குவரத்து மாற்றம்

இதற்கிடையில், பாலத்தின் வழியே செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பக்கத்தில் உள்ள பாலத்தின் வழியே இருவழிப்பாதையாக மாற்றிவிடப்பட்டது. மேலும், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், ஒலக்கூர் போலீஸார் வேகத்தடுப்புகளை அமைத்து, வாகன ஓட்டிகளை மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.