அமெரிக்கா, இங்கிலாந்துக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

அகமதாபாத்: அகமதாபாத்தில் சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்தின் (ஐஎப்எஸ்சிஏ) அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சர்வதேச நிதி நிர்வாகத்தில் இதுவரை ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் திகழ்ந்தன. தற்போது அந்தவரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. அத்துடன் மிக அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நாடாகவும் திகழ்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் மிகப்பெரும் தேக்க நிலை உருவானது. அப்போது எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் இந்தியாவின் பொருளாதார சூழலும் பாதிப்புக்குள்ளானது.

அந்த சமயத்தில் குஜராத் மாநிலம் நிதித்துறையில் மிக முக்கியமான முடிவை மேற்கொண்டது. அப்போது உருவான சிந்தனையின் வெளிப்பாடு இன்று வளர்ச்சியடைந்து ஐஎப்எஸ்சிஏ இங்கு உருவாகும் நிலை எட்டப்பட் டுள்ளது.

21-ம் நூற்றாண்டில் நிதி மற்றும் தொழில்நுட்பம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொண்டால் அது அறிவியிலும், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரும் ஒன்றிணைந்தது. இதில் இந்தியாவுக்கு மிகுந்த அனுபவம் உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் அளவுக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் ஒரு பகுதியாக இங்குள்ள கிப்ட் சிட்டியில் முதலாவது சர்வதேச தங்க பரிவர்த்தனை மையத்தை (ஐஐபிஎக்ஸ்) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவின் 130 கோடி மக்களும் நவீன பொருளாதாரத் துடன் இணைந்துள்ளனர். அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

பிற நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் பாலமாகவும், சர்வதேச வாய்ப்புகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தளமாகவும் கிப்ட் சிட்டி விளங்கும். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா மட்டுமே தரமான பொருட்களையும் சிறப்பான சேவையையும் அளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.

கிப்ட் சிட்டி என்பது குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் என்பதன் சுருக்கமாகும். நிதி சார்ந்த பொருள்கள், நிதி சேவை மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த சர்வதேச நிதிசேவை மையத்தில் (ஐஎப்எஸ்சி) செயல்படும். ஐஐபிஎக்ஸ் என்பது தங்க வர்த்தக மையமாகும். சர்வதேச அளவில் தங்க வர்த்தகத்தில் ஈடுபட இந்த மையம் உதவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.