117 பேரின் எலும்புக்கூடுகள் இந்தோனேஷியாவில் தகனம்| Dinamalar

ஜகர்த்தா : இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஹிந்துக்கள் பாரம்பரிய வழக்கப்படி, இறந்த 100க்கும் மேற்பட்ட வர்களின் எலும்புக் கூடுகளை ஒரே சமயத்தில் தகனம் செய்தனர்.

தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியாவில் உள்ளது பாலி தீவு. இங்கு உள்ள ஹிந்துக்கள், இறந்தவர்களின் உடல்களை முதலில் புதைத்து, சில காலத்திற்குப் பின், சவக்குழியில் இருந்து எலும்புகளை எடுத்து, மொத்தமாக தகனம் செய்கின்றனர். இந்த சடங்கு முடிந்த பின் தான், இறந்தவர்களின் ஆத்மா விடுதலை அடைந்து, புது வாழ்க்கையை துவக்குவதாக மக்கள் நம்புகின்றனர்.

தனித்து தகனம் செய்வதை விட, மொத்தமாக தகனம் செய்வது செலவு குறைவாகவும் உள்ளது. இதனால், இத்தகைய வழிமுறையை மக்கள் பின்பற்றுகின்றனர்.இதன்படி, பாலியின் படங்பாய் கிராமத்தில் இறந்த, 117 பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டு, தகனம் செய்யும் சடங்கு நடந்தது. 20 அடி உயர தேரில், எலும்புகள் அடங்கிய பெட்டிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

இறந்தவர்களின் படங்களை உறவினர்கள் அந்த தேரில் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமானோர் பங்கேற்ற இந்த ஊர்வலத்தின் இறுதியில், எருது வடிவிலான பிரமாண்ட மூங்கில் பொம்மையில் எலும்புகள் வைக்கப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன. அதன் பின், உறவினர்கள் சாம்பலை எடுத்து கடலில் கரைத்தனர். படங்பாய் கிராமத்தில், 117 பேரின் எலும்புக் கூடுகள் தகனம் செய்யப்பட்டது, இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.