கம்போடியாவில் நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்

2022 ஆகஸ்ட் 4 முதல் 5 வரை நடைபெறவுள்ள 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி கம்போடியாவின் புனோம் பென் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.

27 உறுப்பினர்களைக் கொண்ட ஆசியான் பிராந்திய மன்றத்தில் 10 ஆசியான் உறுப்பு நாடுகள், உரையாடல் கூட்டாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் அவுஸ்திரேலியா, கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியக் குடியரசு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா, பங்களாதேஷ், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, மங்கோலியா, பாகிஸ்தான், இலங்கை, பப்புவா நியூ கினியா மற்றும் திமோர்-லெஸ்டே ஆகியன உள்ளடங்கும். 2007ஆம் ஆண்டு முதல் இலங்கை மன்றத்தில் உறுப்பினராக உள்ளது. ‘ஆசியான் ஏ.சி.டி.: சவால்களை ஒன்றாக எதிர்கொள்ளுதல்’ என்ற கருப்பொருளின் கீழ், ஆசியானின் தற்போதைய தலைமை நாடான கம்போடியா இந்த மன்றத்தை நடாத்துகின்றது.

ஆசியான் பிராந்திய மன்றமானது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கருத்தொற்றுமை அடிப்படையிலான முடிவெடுப்பதற்கும் வெளிப்படையான உரையாடலுக்கும் ஒரு முக்கியமான தளமாக அமைவதுடன், பிரச்சினைகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு மற்றும் உலகளாவிய சவால்களை கூட்டாக எதிர்கொள்ளுதல் போன்ற அழுத்தமான விடயங்கள் குறித்து உறுப்பினர்கள் கலந்துரையாடவும் கூட்டுறவு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஒரு மன்றத்தை வழங்குகின்றது. கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் மன்றம் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இருதரப்பு கலந்துரையாடல்களுக்காக மன்றத்தின் பக்க அம்சமாக அமைச்சர் அலி சப்ரி பல பிரதிநிதிகளைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு
2022 ஆகஸ்ட் 02

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.