’என் மரணத்திற்கு கணவரும், மாமியாரும்தான் காரணம்’.. அமெரிக்காவில் இந்தியப் பெண் தற்கொலை!

மனைவிக்கு ஆண் குழந்தை இல்லாததை காரணம் காட்டி அவரை 8 ஆண்டுகளாக கணவர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் நகரை சேர்ந்த மன்தீப் கவுர் என்ற 30 வயதான பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் திருமணம் நடந்தது. இதன்பின்னர் இந்த தம்பதியினர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றனர். இந்த தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மன்தீப் கவுர் அமெரிக்காவில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் மந்தீப் கவுர், “என் மரணத்திற்கு எனது கணவர் மற்றும் மாமியாரும் தான் காரணம். அவர்கள் என்னை வாழ விடவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தினார். இந்த சித்திரவதையை என்னால் இனி மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் டார்ச்சரை புறக்கணித்துவிட்டுத் தான் நான் இங்கு நியூயார்க் வந்தேன். ஆனால், இங்கும் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். அவர்களுக்கு ஆண் குழந்தை வேண்டுமாம். மேலும் வரதட்சணையாக ரூ. 50 லட்சம் தர வேண்டும் என்று என்னை தாக்கி டார்ச்சர் செய்கின்றனர். நான் என் குழந்தைகளை விட்டு உலகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்குச் செய்த கொடூரத்திற்கு எல்லாம் அவர்கள் கடவுளிடம் பதில் சொல்லியே தீர வேண்டும். எனது கணவருக்கு பல வருடங்களாக திருமணத்திற்கு புறம்பான பல உறவுகள் இருக்கிறது. ” என்றார்.

image
மற்றொரு வீடியோவில், மன்தீப் கவுர் அடிக்கப்படும் காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. மன்தீப் கவுருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், மன்தீப்பின் தந்தை ஜஸ்பால் சிங், பிஜ்னோர் நகரில் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில், சந்துவின் தந்தை முக்தார் சிங், தாய் குல்தீப் ராஜ் கவுர் மற்றும் சகோதரர் ஜஸ்வீர் சிங்கின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மன்தீப்பின் தந்தை அளித்த பேட்டியில், “நாங்கள் இந்த வன்முறை ஒருநாள் முடிவடையும் என்று நம்பினோம். அவர்களது பிரச்சினையில் ஒருமுறை தலையிட்டு நியூயார்க்கில் உள்ள காவல் நிலையத்தில் புகாரும் அளித்தோம். மன்தீப்பை அவளது கணவர் அடிக்கு வீடியோ காட்சிகளையும் போலீசாரிடம் காண்பித்தோம். ஆனால், எனது மகளின் கணவர் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் வாங்க என் மகள் கூறினாள். இதன் காரணமாக நாங்களும் வழக்கை வாபஸ் வாங்கினோம். என் மகள் அவளது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையில் இருந்தாள்” என்றனர்.

image
மன்தீப்பின் சகோதரி கூறுகையில், “மன்தீப் தற்கொலை செய்து கொள்வாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. காலை 5.30 மணிக்கு அவள் இறந்துவிட்டாள் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நாங்கள் உதவியற்றவர்களாக உணர்ந்தோம். அவளுடைய கணவருக்குக் மரண தண்டனை கிடைக்க வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க உதவுமாறு இந்திய அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மன்தீப்பின் மூத்த சகோதரர் கூறுகையில், “மன்தீப் மாமியாரும் ஆண் குழந்தை வேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்தார். நாங்கள் நியூயார்க் போலீசாரிடம் புகார் கொடுக்க சென்றபோது மன்தீப்பின் கணவரும், மாமியாரும் அச்சமடைந்தனர். அவர்கள் எங்களிடம் கெஞ்சிக் கேட்டதால் புகாரை வாபஸ் வாங்கினோம்” என்றார்.

இதையும் படிக்க: அறுவை சிகிச்சை மாத்திரைகளை போதை பொருளாக்கிய கும்பல்… மாணவ – மாணவியரும் வீழ்ந்த அபாயம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.