கொந்தகை அகழாய்வு பணி: முதன் முதலாக ஈமத்தாழியில் கண்டறியப்பட்ட சூதுபவள மணிகள்

கொந்தகை அகழாய்வில் ஈமத்தாழியில் 29 சூதுபவள மணிகள் முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளன.
தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிவதற்காக சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், ஏற்கெனவே 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து கொந்தகை அகழாய்வு தளத்தில் நடைபெற்ற 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியின்போது, ஒரே குழியில் அருகருகே 10 முதுமக்களின் தாழி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கீழடி, அகரம் மற்றும் கொந்தகையில் தொடர்ந்து அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
image
இதையடுத்து கொந்தகையில் 7-க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள், 10க்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள், இறுதிச் சடங்குக்கு பயன்படுத்தப்பட்ட பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடி அகழாய்வு தளங்களில் ஒன்றான கொந்தகையில் ஈமத்தாழி ஒன்றில் இருந்து 29 சூதுபவள மணிகள் முதன்முதலாக கிடைத்துள்ளன.
சூதுபவள மணிகள் பீப்பாய் வடிவத்திலும், இவை அக்காலத்தில் ஆபரணங்களாக கோர்க்கப்பட்டு பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் இறந்தவரின் மதிப்பு மிக்க பொருளில் ஒன்றாக சூதுபவள மணிகள் இருந்திருந்தால் அதை அவர் புதைக்கப்பட்ட ஈமத்தாழிக்குள் வைத்து புதைத்திருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
முதன் முதலாக கொந்தகையில் இத்தகைய சூதுபவள மணிகள் ஈமத்தாழிக்குள் இருந்து கண்டறிப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.