“அவளின் கதைகள் என்னை ஊக்குவித்தன” – பாகிஸ்தான் தோழி பற்றி இந்தியப் பெண் நெகிழ்ச்சி பதிவு

வாஷிங்டன்: பாகிஸ்தான் தோழி பற்றி இந்தியப் பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்பதிவை ‘இயர்லி ஸ்டெப்ஸ் அகாடமி’யின் தலைமை நிர்வாக அதிகாரி சினேகா விஸ்வாஸ் ‘லிங்கிடு இன்’ சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் தனது பதிவில் பாகிஸ்தானில் இருந்து வந்து ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் தன்னுடன் படித்த தனது வகுப்புத் தோழி பற்றி பேசியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் அப்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் சினேகா பகிர்ந்து கொண்டுள்ளார்.

இப்பதிவில் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியால் வளர்க்கப்பட்ட பகைமை உணர்வுடனே இருவரும் வளர்ந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் தனது தோழியை சந்தித்த பிறகு இப்பகைமை உணர்வை கடந்து வந்துவிட்டதாக சினேகா கூறியுள்ளார். ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் முதல் நாளில் அப்பெண்ணை சினேகா சந்தித்துள்ளார். முதல் செமஸ்டர் முடிவதற்குள் பாகிஸ்தான் பெண் சினேகாவின் நெருங்கியத் தோழிகளில் ஒருவராகி விட்டார்.

இதுபற்றி சினேகா தனது பதிவில், “ஒரு சிறிய இந்திய நகரத்தில் வரலாற்று புத்தகங்கள், கிரிக்கெட் மற்றும் ஊடகம் என்ற அளவில் மட்டுமே எனது குழந்தைப்பருவ அறிவு மட்டுப்பட்டிருந்தது. ஆனால் எல்லைகளை கடந்து மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது நமது கருத்துகள் மாறும். தேநீர், பிரியாணி மற்றும் படிப்பு தொடர்பான விஷயங்களில் நாங்கள் ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டோம். பாகிஸ்தானில் பழமைவாத பின்னணியில் அவள் வளர்ந்தாலும் அவளுக்கும் அவள் சகோதரிக்கும் பெற்றோர்கள் மிகவும் ஆதரவாக இருந்து பழைமைகளை உடைத்து கனவுகளை துரத்தும் தைரியத்தை கொடுத்துள்ளனர். அச்சமற்ற லட்சியங்கள் மற்றும் துணிச்சலான தேர்வுகள் பற்றிய அவளின் கதைகள் என்னை ஊக்குவித்தன” என்று கூறியுள்ளார்.

ஹார்வர்டு பல்கலை.யில் நடந்த கொடி நாள் நிகழ்ச்சியில் இருவரும் தங்களின் தேசியக்கொடியை பெருமிதத்துடன் காட்டும் புகைப்படத்தை. சினேகா பகிர்ந்து கொண்டுள்ளார்.

“ஹார்வர்டு பல்கலை.யில் புகழ்பெற்ற கொடி நாளில் எங்களைப் பாருங்கள். தடைகளை உடைத்த மகிழ்ச்சியில் நாங்கள் புன்னகைக்கிறோம். இது இரு நாடுகளுக்கு மட்டுமல்ல. தடைகளை கடக்க அச்சப்படும் இரு நாடுகளின் எண்ணற்ற சிறுமிகளுக்காக” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் தெரிவித்துள்ள நிலையில் 1,700-க்கும் மேற்பட்டோர் கருத்துதெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இதனை பிறருக்கு பகிர்ந்துள்ளனர்.

இது மிக அழகான செய்தி என வலைப்பதிவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், “மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் மனிதர்கள். வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.