அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாராஜன் கார் மீது காலணி வீச்சு: பாஜக தொண்டர் செய்கையால் பரபரப்பு

மதுரை: மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணமடைந்தார். அவரது உடல் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

அப்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசு சார்பில் மரியாதை செலுத்த விமான நிலையம் சென்றார். அவர் விமான நிலையம் சென்ற வேளையிலேயே பாஜகவினரும் அங்கு திரண்டனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் அங்கு பெருந்திரளாக தொண்டர்களைத் திரட்டி வந்தனர்.

அப்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் முதலில் மரியாதை செய்த பிறகே, பாஜகவினர் மரியாதை செய்ய வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு காருக்கு திரும்பி லட்சுமணின் சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டார். அப்போது விமான நிலைய வளாகத்தில் திரண்டிருந்த பாஜகவினரில் பெண் ஒருவர் அமைச்சரின் காரை நோக்கி காலணியை வீசியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அடங்கிய காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர். ஆனால், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது அமைச்சர் தரப்பிலோ, கட்சித் தரப்பிலோ புகார் வந்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனக் காத்திருப்பதாகத் தெரிகிறது.

வீட்டிற்கு சென்று அஞ்சலி: விமான நிலையத்திலிருந்து ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் T.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிவாரணநிதி ரூ 20 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.