கர்நாடகாவில் அரசு பணிக்கு ரூ.300 கோடி லஞ்சம் – காங். எம்எல்ஏ குற்றச்சாட்டால் சர்ச்சை

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் மூத்த எம்எல்ஏவும் செய்தி தொடர்பாளருமான பிரியங்க் கார்கே குல்பர்காவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு அரசு பணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு, பொறியாளர் தேர்வில் ஊழல் ஆகியவை பற்றி நீதிபதி தலைமையிலான உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் கர்நாடக மின் வாரிய‌த்தில் நடந்த 1,429 பணியிடங்களுக்கான நியமனத்தில் 600 பணியிடங்கள் லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. உதவி பொறியாளர் பணிக்கு ரூ.50 லட்சம், இளநிலை பொறியாளர் பணிக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் கைமாறி உள்ளது.

கர்நாடகாவில் ஆண்களுக்கு அரசு வேலை வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஒருவர் தன்னுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருந்த பெண்ணுக்கு அரசு வேலை கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானதால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

சப் இன்ஸ்பெக்டர் பணி நியமன முறைகேட்டில் காவல்துறை உயர் அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள், இடைத்தரகர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரியங்க் கார்கேவின் இந்த விமர்சனத்துக்கு கர்நாடக அமைச்சர்கள் அசோக், பைரதி பசவராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.