இணைந்து பல சாதனைகள் செய்வோம் – ஷங்கருக்கு கமல் வாழ்த்து

தமிழ் சினிமாவின் பிரமாண்டம் என பெயர் எடுத்தவர் ஷங்கர். பிரமாண்டம் மட்டுமின்றி கதை ரீதியாகவும் தனி பாணியை கடைப்பிடித்து ரசிகர்களின் மனதில் இருக்கிறார். இவரின் ஆரம்பகால படங்களான ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், காதலன் உள்ளிட்ட படங்கள் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றவை. அதேபோல் இவர் இயக்கிய பாய்ஸ் படமும் சர்ச்சையையும், வரவேற்பையும் சேர்த்து பெற்றது. விக்ரமை வைத்து அந்நியன் படத்தில் வித்தியாசம் காட்டிய ஷங்கர் ரஜினியுடன் கைகோர்த்த சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டை நடத்தின. இவர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் இயக்கிவருகிறார்.

தமிழில் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷங்கருக்கு கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு நன்றி தெரிவித்த ஷங்கர், நிச்சயமாக ‘இந்தியரே’. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி கமல் ஹாசன் சார் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல் ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. 

பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. ‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்’ என தெரிவித்திருந்தார். சமீபத்தில் இப்படத்தில் மீண்டும் நடிப்பதை நடிகை காஜல் அகர்வால்கூட உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.