பாஜக நாடாளுமன்ற குழு: எடியூரப்பா, பட்னவிஸ் 'உள்ளே'.. நிதின் கட்கரி, யோகி, சவுகான் 'வெளியே!'

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

பாஜகவின், உயர்மட்ட அமைப்பாக நாடாளுமன்றக் குழு உள்ளது. இந்தக் குழு, முதலமைச்சர், மாநில தலைவர்கள் மற்றும் பிற முக்கியப் பதவிகளை முடிவு செய்கிறது. இந்நிலையில் இன்று, பாஜக நாடாளுமன்ற குழு மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, அதிகாரமிக்க குழுவில் நான்கு புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்தத் தலைவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, பாஜகவை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.

வயது மூப்பு காரணமாக, கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பி.எஸ்.எடியூரப்பா, பாஜக நாடாளுமன்ற குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். கடந்த சில மாதங்களாக கட்சித் தலைமை மீது இவர் அதிருப்தியில் இருந்ததாக தகவல் பரவிய நிலையில் அவரை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியேற்றப்பட்டு உள்ளது, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூத்த அமைச்சர் மற்றும் பாஜக மூத்தத் தலைவரான இவரது வெளியேற்றம், பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது. இதே போல், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானும் பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். 20 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றியவருக்கு இது மிகப்பெரிய அடி.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக நாடாளுமன்ற குழுவில் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார். அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் பதவியை ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு வழங்க ஒப்புக் கொண்ட மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், நாடாளுமன்ற குழுவிலும், மத்திய தேர்தல் குழுவிலும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதே போல் தேர்தல் குழுவில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் சேர்க்கப்பட்டு உள்ளார். பாஜக நாடாளுமன்ற குழுவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் நிரந்தரம் ஆனவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.