இன்ஸ்டாவில் நீச்சல் உடையில் தோன்றிய பேராசிரியை – ரூ.99 கோடி நஷ்டஈடு கோரும் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக ரூ.99 கோடி கொடுக்க வேண்டும் என்று நீச்சல் உடையுடன் தோன்றிய பேராசிரியைக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியாருக்கு சொந்தமான செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை ஒருவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீச்சல் உடையுடன் புகைப்படம் பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து, பேராசிரியையின் செயலைக் கண்டித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நிர்வாகம் முடிவெடுத்தது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விடதாகக் கூறி தன்னை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக பேராசிரியை புகாராக கூறியுள்ளார். ஆனால், அந்த உதவி பேராசிரியை அவராகவே விரும்பி ராஜினாமா செய்துள்ளார் என பல்கலைக்கழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், கல்லூரிக்கு அவப்பெயர் பெற்றுத் தந்ததால் பேராசிரியை இழப்பீடாக ரூ.99 கோடி தரவேண்டும் என்றும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு எதிரான பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் பேராசிரியை தெரிவித்துள்ளார். மேலும் அவர், தாம் ஆகஸ்ட் மாதம்தான் பல்கலைக்கழகத்தில் பணியில்  சேர்ந்ததாகவும், பணியில் சேருவதற்கு முன்பு நீச்சல் உடையில் புகைப்படங்களை பதிவிட்டதாகவும், அது சட்டப்படி தவறாகாது என்றும் பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

image
மேலும் அவர் பல்கலைக்கழகத்தின் மீதும் புகார் கூறியுள்ளார். ”பல்கலைக்கழக நிர்வாகம் எனது புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து என்னிடம் காட்டினார்கள். ஒருவரின் அனுமதி இல்லாமல் புகைப்படத்தை எடுப்பதும், அதை இதுபோன்று செய்வதும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும். அந்த நேரத்தில் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இது எனது நன்னடத்தையை அழிக்கும் உள்நோக்கம் கொண்டது” என்று அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதனிடையே புகாருக்குள்ளான பேராசிரியைக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். பேராசிரியை தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிரம் பக்கத்தில்தான் அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்தார். அது அவரது தனிப்பட்ட விவகாரம். அது பல்கலைக்கழகத்தின் புகழுக்க்கு எந்த வகையிலும் இழுக்கு ஏற்படுத்தாது என்றும் ஒருசாரார் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் கொல்கத்தாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: குழந்தையுடன் இருட்டில் பரிதவித்த ரயில் பயணி -டிக்கெட் பரிசோதகர் செய்த உதவி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.