'ராணுவத்தில் சேர விரும்பினேன்.. ஆனால்..!' – மனமுருகிய ராஜ்நாத் சிங்!

“ராணுவத்தில் சேர விரும்பியதாகவும், ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக, ராணுவத்தில் இணைய விரும்பவில்லை” என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கமாகத் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்நாத் சிங் இருக்கிறார். இவர், அமைச்சரவையில் மூத்த அமைச்சர் மற்றும் கட்சியிலும் மூத்தத் தலைவர். பாஜக தேசியத் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். இம்பாலில், இந்திய ராணுவம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

எனது சிறு வயது கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ராணுவத்தில் சேர விரும்பினேன். அதற்காக எழுத்துத் தேர்வு எழுதினேன். ஆனால், எனது தந்தையின் மரணம் உட்பட எனது குடும்பத்தில் ஏற்பட்ட சில சூழ்நிலைகளால் என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை.

ராணுவ சீருடையை குழந்தைக்கு கொடுத்தால், அவனது குணம் மாறுகிறது. இந்த சீருடையில் ஒரு பெரிய கவர்ச்சி இருக்கிறது. இந்தியா – சீனா இடையே மோதல் நடந்து கொண்டிருந்த போது, உங்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், எனக்கும் அன்றைய ராணுவ தளபதிக்கும் தெரியும். நமது ராணுவ வீரர்கள் காட்டிய துணிச்சலும், தைரியமும் தெரியும்.

நாடு எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கும். நான் எங்கு சென்றாலும் ராணுவ வீரர்களை சந்திப்பதை உறுதி செய்து கொள்கிறேன். எனது மணிப்பூர் பயணம் திட்டமிடப்பட்ட போது, நான் (இராணுவத் தளபதி) பாண்டேவிடம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் 57வது மலைப்பிரிவின் துருப்புக்களை சந்திக்க விரும்புகிறேன் என்று கேட்டிருந்தேன். ராணுவ வீரர்களை சந்திப்பது எனக்கு ஒரு பெருமையை அளிக்கிறது.

டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் ஏதோ ஒரு வகையில் தேசத்திற்குப் பங்காற்றுகிறார்கள் என்றாலும், உங்கள் தொழில் ஒரு தொழிலை விட மேலானது மற்றும் ஒரு சேவையை விட மேலானது என்று நான் நம்புகிறேன். அசாம் ரைபிள்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் வடகிழக்கின் காவலாளி என்றழைக்கப்படுவது சரியானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் உருக்கமாகப் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.