தென் மாநிலங்களில் குறையும் மக்கள் தொகை: என்ன பிரச்சினைகள் ஏற்படும்?

உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடு எது என்று கேட்டால் சீனா என்ற பதிலும், அதற்கு அடுத்த நாடு எது என்றால் இந்தியா என்ற பதிலும் நம்மிடம் உடனடியாக வரும். ஆனால், இந்த நிலை அண்மைக்காலமாக மாறி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை வீழ்ந்து வருகிறது. சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து மிகத்தீவிர பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்தியா போன்ற மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. 1980களில் இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான பிரசாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில். தென் மாநிலங்களில் நல்ல வளர்ச்சியும், கல்வியறிவு இருந்தது. எனவே, மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை தென் மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால், வடமாநிலங்கள் அப்படி இல்லை. அந்த மாநிலங்களில் இன்னமும் மக்கள் தொகை கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அதனால், பல்வேறு பிரச்சினை தென் மாநிலங்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இந்திய மக்கள் தொகையில் தென் மாநிலங்களின் பங்கு குறைவாக உள்ள தகவல் தரவு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1951இல் 26.2 சதவீதமாக இருந்த தென் மாநிலங்களின் பங்கு, 2022இல் 19.8 சதவீதமாக குறைந்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மக்கள் தொகையில், தென் மாநிலங்களின் பங்கு 26 சதவீதமாக இருந்தது, ஆனால், தற்போது 20 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இதுவே, உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1951இல் 39.1 சதவீதமாக இருந்த அம்மாநிலங்களின் பங்கு 2022இல் 43.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருவது ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. இளைஞர்களின் தேசம் என்று சொல்லக் கூடிய இந்தியாவில் சராசரி வயது 25ஆக இருக்கிறது. ஆனால், இது தமிழகத்தில் 35 முதல் 45க்குள் இருக்கின்றன. இந்த சராசரி 45-55 என்று மாறும். அதன்பிறகு 55க்கு மேல் சராசரி வயது அதிகரிக்கும். அப்போது வேலை பார்ப்பவர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள் என்று எச்சரிக்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

கொரோனா பரவலின் போது, பெரும்பாலான வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் சென்று விட்டதால், பல இடங்களில் வேலை நின்று விட்டதை பார்க்கும் போது, தமிழகத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பது தெளிவாக தெரிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். எனவே, மக்கள்தொகையை தென் மாநிலங்கள் அதிகரிக்க விட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகம். எனவே, அவர்கள் உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கு செல்வதில்லை என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டால், மென்பொருள் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பெரு நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநிலத்தவர்களை கணக்கெடுத்தால் நிலைமையின் தீவிரம் புரியும். மேலும், வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களில் குடியேறி வருகின்றனர். அவர்கள் வாக்களிக்கும் உரிமையையும் பெற்று வருகின்றனர். நமது மக்கள் தொகை குறைந்து, வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அவர்களால் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க முடியும். எதிர்காலத்தில் அவர்களது வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் முயற்சி செய்யும். இதற்கு நமது ஊரில் எதிர்ப்பு கிளம்பும். இதனால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நிதி பகிர்ந்தளிப்பின்போது, மக்கள் தொகையின் அடிப்படையில் சில மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கும். அந்தமாதிரியான சமயங்களில் நமக்கு போதுமான நிதியும் வருவதில்லை. மக்கள் தொகை கட்டுப்பாட்டை மத்திய அரசு வலியுறுத்தியபோது தென் மாநிலங்கள அவற்றை சரியாக செய்தன. ஆனால், வட மாநிலங்கள் பின்பற்றவில்லை. அதன் விளைவுதான் இது. அதேபோல், மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவை தொகுதிகளுக்கான இடங்கள் பிரிக்கப்படும்போது, நமது பிரதிநிதித்துவமும் குறைய வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.