உணவு பழக்கம் எப்படி இருந்தாலும் உடற்பயிற்சி மிக அவசியம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: நம் உணவுப் பழக்கம் எப்படி இருந்தாலும், அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று, சென்னையில் நடந்த ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், ஞாயிறுதோறும் சென்னையின் முக்கியமான சாலைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு நடனம், விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நேற்று அண்ணா நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இறகுப்பந்து, மேஜைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:

சென்னையில் 3 மாதங்களாக ஞாயிறுதோறும் ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த முறை கரோனா பாதிப்பால் நான் வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

கரோனா தொற்றில் இருந்து இரண்டு, மூன்று நாட்களில் நான் விடுபட்டேன். என் உடல்நல பராமரிப்புதான் அதற்கு காரணம். எனக்கு கிட்டத்தட்ட 70 வயது. ஆனால் நம்பமாட்டீர்கள். நானும், மகனும் வெளியூர் சென்றால், புதிதாக பார்க்கிறவர்கள், ‘அண்ணன், தம்பிகளா’ என்று கேட்பார்கள். வெளிநாடுகளுக்கு சென்றபோது அது மாதிரி பலமுறை நடந்தது உண்டு.

நேரம் கிடைக்கும்போது, உடல்நலத்தை பேணிப் பாதுகாப்பதில் அக்கறை எடுத்துக் கொள்கிறேன். வயிறுமுட்ட சாப்பிடக் கூடாது.அதற்காக, சாப்பிடாமலும் இருக்க கூடாது. நம் உணவு பழக்கம் எப்படி இருந்தாலும், கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

நான் காலையில் ஒரு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறேன். அடுத்தநாள் காலையில் ஒரு மணி நேரம் யோகாசெய்கிறேன். மாலையில் ஒரு மணி நேரம்5 கி.மீ. நடக்கிறேன். பணிப் பொறுப்பின் காரணமாக, இதை தினமும் செய்ய இயலவில்லை. ஆனால், எங்கு சென்றாலும் வாய்ப்பு கிடைக்கும்போது முடிந்த அளவு செய்துவிடுவேன். கரோனாவால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பு வராததற்கு உடற்பயிற்சிதான் காரணம். உடல்நலத்தை பேணிப் பாதுகாத்தால், எந்த நோய்கள், என்ன கவலைகள், எத்தனை டென்ஷன் வந்தாலும், அதில் இருந்து சுலபமாக விடுபடலாம்.

இதுபோன்ற ‘மகிழ்ச்சியான தெருக்கள்’நிகழ்ச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற வேண்டும். இதனால்சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, உடல்நலம், மனநலமும் பாதுகாக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை தினசரி நடத்தமுடியாவிட்டாலும், வாரத்தில் இரண்டு, மூன்று நாட்களாவது நடத்தி, கட்டாயம் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

உங்களை ஊக்கப்படுத்துவதோடு, உங்களுடன் கலந்துகொண்டு என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதற்காக இன்னும் பலமுறைஇந்த நிகழ்ச்சிக்கு நிச்சயம் வருவேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.

எம்.கே.மோகன் எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.