சென்னைத் தமிழ் என்றாலே இழிவாக நினைப்பதா?

மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போலச் சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். ஆனால், எந்த வட்டார வழக்கும் சந்திக்காத ஒரு விமர்சனத்தை அல்லது எதிர்வினையை சென்னைத் தமிழ் சந்திக்கிறது. சென்னை வட்டார வழக்கைப் பேசுகின்றபோதே முகம் சுளிக்கின்ற தன்மை இன்றளவும் குறைந்தபாடில்லை. சென்னைத் தமிழ் என்றாலே அதன் கொச்சைத்தன்மை, புரியாத தன்மைதான் முன்வைக்கப்படுகிறது. 

சென்னைத் தமிழை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது படிக்காத மக்களின் கொச்சை மொழி என்று தோன்றும். ஆனால் சற்று நிதானமாகப் பார்த்தால் எல்லா வட்டார வழக்குகளையும்போலவே சென்னைத் தமிழும் வட்டார வழக்குகளுக்கான அனைத்துக் கூறுகளையும் கொண்ட வழக்கு என்பது தெரியவரும்.

ஒரு மொழியில் எந்த அளவுக்கு சொற்கள் மிகச் சிக்கனமாகக் கையாளப்படுகிறோதோ, அந்த அளவுக்கு சிறப்பு மிக்கதாக மாறுகிறது.  சென்னைத் தமிழின் சிறப்பே அதன் சொல் சிக்கனமும், எளிமையும் தான். சாப்பிடு என்பதை சென்னைத் தமிழில் துன்னு எனச் சொல்வார்கள். கூப்பிடு என்பது கூவு எனவும், கூட்டிக்கிட்டு போ என்பது கூட்னு போ எனவும் மாறியது. இருக்கிறது என்பதைக் ‘கீது’ என்பார்கள். இது போன்ற சென்னைத் தமிழின் பல சொற்கள் நாம் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தையின் எளிய மற்றும் சிக்கனமான வடிவம் தான்.

தமிழ்சொற்களின் பயன்பாடு

மற்ற வட்டார வழக்குகளில் இல்லாமல் சென்னைத் தமிழுக்கு உள்ள மற்றொரு சிறப்பு தூய தமிழ் சொற்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுவது தான். தூரம் என்ற சொல்லைக் குறிக்க அப்பால், தொலைவு ஆகிய சொற்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதைத்தான் நம் சென்னை மக்கள் அப்பால போ எனக் கூறுகின்றனர். அதேபோல, அருகில் என்பதற்கு அண்டை என்ற சொல் தமிழில் உண்டு. வீட்டிற்கு அருகில் என்பதைக் குறிக்க ’வீட்டாண்ட’  என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 

உண்மையை குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் மெய். இதைத்தான் சென்னை மக்கள் மெய்யாலுமா? எனக் கேட்கின்றனர். இது போன்ற பிற சொற்களையும் கூற வேண்டுமென்றால், அந்தப் பட்டியல் மிக நீளமாகப் போகும்.

பிறமொழிச் சொற்களின் கலப்பு

‘பேமானி’ என்பது, பெர்ஷிய வார்த்தை. அதற்கு, நாணயமில்லாதவன், சொன்ன வாக்கைக் காப்பாற்றாதவன் என்று பொருள். நாஸ்தி என்றால் வடமொழியில் ஒன்றுமில்லை என்று பொருள்.  ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்பதைக் கூறத்தான் ‘நாஸ்தி பண்ணிடுவேன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர் சென்னை மக்கள்.

பேக்கு என்ற சொல் உருது மொழியில் இருந்து வந்தது. உருது மொழியில் ‘பேவ்கூஃப்’ என்றால் முட்டாள் என்று அர்த்தம். சென்னைவாசிகள் இதை சுருக்கி பேக்கு என்று ஆக்கிவிட்டனர். 

பிற மொழிகளை உள்வாங்கித் தன்வயப்படுத்தும் திறன் சென்னையின் மிகச் சிறப்பான அம்சங்களில் ஒன்று. கஸ்மாலம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். வடமொழியில் உள்ள கஸ்மலம் என்ற சொல் இதன் வேர்ச் சொல். இதன் பொருள் அழுக்கு. இழிவான காரியங்களைச் செய்பவர்களைச் சென்னைத் தமிழில் கஸ்மாலம் என்று சொல்வார்கள்.

உணர்ச்சிக்கு நெருக்கமான வெளிப்பாடுகள் சென்னைத் தமிழின் வியக்கவைக்கும் ஒரு கூறு. மொழியின் ஆதாரமான பயன்பாடுகளில் ஒன்று, உணர்ச்சியை வெளிப்படுத்துதல். அந்த வகையில் பார்த்தால் சென்னைத் தமிழ் அளவுக்கு உணர்ச்சிக்கு நெருக்கமான ஒரு வழக்கைக் காண்பது அரிது. புட்டுக்கிச்சி, பூட்ட கேஸு என்பன போன்ற சொற்கள் உணர்த்தும் உணர்ச்சியைப் பிற மொழிகளில், பிற வழக்குகளில் இவ்வளவு சிக்கனமாக வெளிப்படுத்த முடியாது. ரொம்பவும் பீற்றிக்கொள்ளாதே என்பதைச் சொல்ல அமுக்கி வாசி என்று சொல்வதும் உணர்ச்சியைக் கச்சிதமாகக் காட்டும் வெளிப்பாடுதான்.

தாராந்துட்டியா என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். தாரை வார்த்தல் என்பது இந்து சமயச் சடங்கு சார்ந்த ஒரு தொடர். தன்னுடைய ஒரு பொருளைத் தன்னுடையது அல்ல என்று முற்றாகத் துறந்து பிறருக்குத் தந்துவிடும் செயலே தாரை வார்த்தல். சென்னைத் தமிழில் தாராந்துட்டியா என்றால் தொலைந்துவிட்டாயா என்று பொருள். தாரை வார்த்தல் என்னும் தொடருக்கான பொருள் அங்கதச் சுவையோடு மறு வடிவம் எடுக்கும் அழகை இங்கே காணலாம்.

அப்பீட் என்ற சொல் பம்பர விளையாட்டில் பயன்படுத்தப்படுவது. தரையில் சுற்றும் பம்பரத்தின் ஆணியைச் சாட்டையால் அணைத்து, சாட்டையச் சுண்டிப் பம்பரத்தைத் தலைக்கு மேலே எழுப்பிப் பிடிக்கும் செயலுக்கு அப்பீட் என்று பெயர். இது அப் ஹெட் என்ற சொல்லிலிருந்து மருவிவந்தது என்ற தகவல் ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் என்னும் நாவலில் காணக் கிடைக்கிறது. அதுபோலவே அம்பேல் என்னும் சொல் ஐ-ஆம்-ஆன்-பெயில் என்னும் தொடரின் மரூஉ என்றும் அந்த நாவல் சொல்கிறது.

இவை இரண்டுமே மூலப்பொருளுக்கு நெருக்கமான பொருளிலேயே விளையாட்டில் பயன்பட்டாலும் சென்னைத் தமிழின் நடைமுறைப் பயன்பாட்டில் வேறு பொருள்களையும் இவை தருகின்றன. கிளம்புகிறேன் (நான் அப்பீட்டு) என்றும் ஆளை விடுங்கள் (அம்பேல்) என்றும் நடைமுறையில் இவை வழங்கப்படுகின்றன.

பொறம்போக்கு, கேப்மாறி…

பொறம்போக்கு என்பதும் ஆங்கிலத் தாக்கத்தால் உருவான சொல்தான். இதற்குப் பின், ஒரு வரலாறு உள்ளது. 1800களில், இங்கிலாந்தில் இருந்து, பலர் தங்கள் நிலங்களை விட்டு விட்டு ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுவிட்டனர். லார்டு பென் புரோக் என்பவர், நிலங்களுக்கேற்ற வரி வசூலாகாததை விசாரித்து, ஆளில்லா நிலங்களை அரசு நிலமாக்க, ‘பென் புரோக்’ என்னும் சட்டத்தை இயற்றினார். 1820களில், சென்னை மாகாண கவர்னராக இருந்த மன்றோ, ரயத்வாரி சட்டம் மூலம், மேய்ச்சல், காடு, கல்லாங்குத்து ஆகிய இடங்களை, பென் புரோக் சட்டத்தின் அடிப்படையில் அரசுடைமை ஆக்கினார். அரசு இடங்களில் குடியேறியவர்களை, ‘பென் புரோக்’ என அழைத்தனர். பின் அது மருவி, புறம்போக்கு என்று ஆகி, தகுதி இல்லாத, கேட்பதற்கு ஆளில்லாதவர்களைத் திட்டும் வார்த்தையாக புறம்போக்கு ஆகிவிட்டது என்று சொல்லப்படுகிறது.

பிராமண அர்ச்சகர்களுக்கு ஒரு வார்த்தை

கேப்மாறி என்னும் வசைச் சொல்லும் ஆங்கிலத்திருந்துதான் வந்தது. கோட்டையில் உள்ள வேலைக்காரர்களுக்கு, வேலைக்கு ஏற்பப் பல வண்ணத் தொப்பிகள் வழங்கப்பட்டு, உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அவர்கள் தங்களுக்குள் தொப்பிகளை மாற்றி ஏமாற்றி உதவியைப் பெறுவர். அப்படி ஏமாற்றுபவர்களை, ‘கேப் மாறி’ என்றனர். ஏமாற்றுபவர்களுக்கு கேப்மாறி என்னு பெயர் இப்படித்தான் வந்தது.

இத்தனை மொழிகளின் தாக்கம் சென்னைத் தமிழில் இருப்பதைப் பார்க்கும்போதே இத்தனை மொழிகளுடன் அது உறவாடியிருப்பதை உணர முடியும். சென்னையிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உருது, ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி ஆகிய பல மொழிகள் புழங்கியிருப்பதன் அடையாளங்களைச் சென்னைத் தமிழில் காணலாம்.

சென்னைக்கு மிக அருகில் இருக்கும் ஆந்திரப் பிரதேசத்தின் தாக்கத்தைச் சென்னையின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் மட்டுமின்றி சென்னைத் தமிழின் நைனா, டப்பு, துட்டு, போன்ற சொற்களிலும் (எனக்)கோசரம், (அதுக்)கோசரம் போன்ற வழக்குகளிலும் காணலாம். கோசரம் என்பது தெலுங்குச் சொல்.

எளிமை, சிக்கனம், பிறமொழிக் கலப்பு, கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாடு, பொருள் நுட்பம் எனப் பன்முகம் கொண்டது சென்னைத் தமிழ். இந்த அளவுக்கு வண்ண மயமான இன்னொரு வழக்கை எந்த மொழியிலும் காண்பது அரிது. ஆனால் இந்தத் தமிழைப் பெரும்பாலும் படிக்காதவர்களும் அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் ஒரே காரணத்துக்காக இதை இழிவாகப் பார்க்கும், சித்தரிக்கும் போக்கு படித்த நடுத்தட்டு, மேல் தட்டு மக்கள் மத்தியில் நிலவுகிறது. விளிம்பு நிலை சார்ந்த கூறுகளை இழிவாகவோ பரிகாசமாகவோ அனுதாபத்துடனோ வெறுப்புடனோ அணுகும் தட்டையானதும் அதிகார உணர்வு கொண்டதுமான மைய நீரோட்டப் பார்வை இது. இந்தப் பார்வையிலிருந்து விடுதலை பெறுபவர்களால் மட்டுமே சென்னைத் தமிழின் அழகையும் அருமையையும் உணர முடியும்.

இத்தனை விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் கூறியதற்குக் காரணம், சென்னைத் தமிழையும், பிற வட்டார வழக்குகளைப் போன்றே கருத வேண்டும் என்பதை உணரத்தான். ஆனால், எதார்த்த நிலை என்பது வேறு. 10 பேர் கூடியுள்ள இடத்தில் ஒருவர் சென்னைத் தமிழில் பேசினால் அவரைப் பிறர் பார்க்கும் பார்வையே வேறு. சென்னைத் தமிழ் பரவலாக இழிவாக எண்ணப்படுவதற்குக் காரணம், அம்மொழி பெரும்பாலும் அடித்தட்டு மக்களால் பேசப்படுவது தான். இதன் காரணமாக, படிக்காத எளிய மக்கள் மட்டுமே சென்னைத் தமிழை பேசுவார்கள் என்பது நம் பொதுப்புத்தியில் அமர்ந்து விட்டது. இந்த எண்ணம் தானாக வந்ததல்ல. நமக்கு ஊடகங்கள், திரைப்படங்கள் என பல்வேறு காரணிகளால் நமக்கு விதைக்கப்பட்டது. இதனை திரையில் மாற்றிக் காட்டியவர் பா.ரஞ்சித் மட்டுமே. 

நெடிய பொருளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை சென்னைத் தமிழுக்கே உரிய பாணி என்பதனால் தான், திருவள்ளுவர் இரண்டே வரிகளில் ஆழமான கருத்துகளைக் கூறினார் போல. ஆம்….திருவள்ளுவரும் சென்னைத் தமிழர் தானே. 

எல்லா பேச்சு வழக்கிற்கும் ஒரு இனிமை உண்டு.. தனித்துவம் உண்டு. சென்னைத் தமிழும் அப்படித்தான். எனவே மொழியில் உயர்வு, தாழ்வு என்ற பொதுப்புத்தியை உடைத்து, சென்னை தினத்தன்று சென்னைத் தமிழைக் கொண்டாடுவோம்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.