மாஜி அமைச்சர் உறவினர் காவிரியில் மூழ்கி பலி: மகனை காப்பாற்ற முயன்ற போது பரிதாபம்

மொடக்குறிச்சி: ஈரோட்டில் காவிரி ஆற்றில் குளித்தபோது சுழலில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட மகனை மீட்க முயன்ற தந்தை நீரில் மூழ்கி பலியானார். இவர் மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உறவினராவார். கோவை அடுத்த மதுக்கரை மார்க்கெட் அருகே அன்புநகரை சேர்ந்தவர் பாலசண்முகம் (44) விவசாயி. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெரிய மாமனாரது மகன் ஆவார்.  ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் அடுத்த மன்னதாம்பாளையத்தில் இவர்களது குலதெய்வ கோயிலான குலவிளக்கம்மன் கோயில் உள்ளது. இங்கு கிடா விருந்து வைப்பதற்காக நேற்று கோவையில் இருந்து பஸ், கார் மூலம் 150க்கும் மேற்பட்டோர் ஈரோடு வந்தனர். மதியம் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பாலசண்முகமும் அவரது மகன் அக்‌ஷய்குமார் (20) மற்றும் உறவினர்கள் 5 பேர் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். இதில் ஆழமான பகுதிக்கு சென்ற அக்‌ஷய்குமார் சுழலில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். உடனே தந்தை பாலசண்முகம் மகனின் கையை பிடித்து இழுத்து மேலே ஏற்றியுள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் படிக்கட்டில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.