வசூல் வேட்டைக்காக செந்தில் பாலாஜி இதை செய்கிறார் – அண்ணாமலை

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அதன் தலைவருமான அர்ஜுன மூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இன்று இணைத்துக்கொண்டார். அதன்பின்னர் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பாஜகவின் சித்தாந்தம், கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும், இக்கட்சியில் இணைவதற்கு அனுமதி இருக்கிறது” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ தமிழ்நாடு மின்துறை அமைச்சர் மற்றும் அவரது சகாக்கள், பெரிய நிறுவனங்கள், சிறு – குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளித்துறை நிறுவனங்கள் என அனைவரிடமும் பேரம் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்த நாடகமே ஆங்காங்கே வசூல் வேட்டை நடத்துவதற்காகத்தான். மக்களிடம் சென்று கருத்து கேட்கின்றோம், அதன்மூலமாக ஏற்றிய மின் கட்டணத்தில் ஒரு பகுதியை குறைப்பது என்று சொல்வது திமுக கட்சியின் மின்துறை அமைச்சர் அனைத்து பெரிய நிறுவனங்களிடம் இருந்து ஒரு வசூல் வேட்டை நடத்துவதற்காக போடப்படும் கபட நாடகம்தான் மக்களிடம் கருத்து கேட்பது. எனவே, இந்த நாடகத்தை நிறுத்திவிட்டு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். இதுதான் பாஜகவின் கோரிக்கை.

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக இதுவரை 30 தற்கொலைகள் நடந்துள்ளதாக காவல் துறை பதிவில் பதிவாகியுள்ளது. ஆனால், முதலமைச்சரோ கருத்து கேட்பதாக கூறுகிறார். தொடர்ந்து என்ன கருத்து கேட்கிறார் என்பது தெரியவில்லை. ஆன்லைன் ரம்மியை மாநில அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். கருத்து கேட்டு காலம் தாழ்த்தாமல், இனி  யாரேனும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டால், அவர்களின் ரத்தம் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மீதும் மற்றும் முதல்வரின் கையிலும்தான் இருக்கும். அவர்கள்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே, ஆன்லைன் ரம்மிக்கு முதல்வர் உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, ஆட்சியாளர்கள் இலவசங்கள் குறித்து அறிவித்து எப்படி ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பது தொடர்பான விவாதமே தவிர, குடிமக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமையை இலவசம் என்று யாரும் பேசவில்லை. பிரதமர் மோடி கொடுத்த வீடு, கேஸ் உள்ளிட்டவை எல்லாம் இலவசங்கள் கிடையாது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.