'ஏலே புடின் காத பாத்தீங்களா?' ‘பாடி டபுள்’ என்றால் என்ன?

உக்ரைனின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, சுமார் 150 நாட்களை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. போர் காரணமாக வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயரும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்த போதும், அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடின் அசர மறுக்கிறார். தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது பதிலுக்கு பொருளாதாரத் தடைகளை ரஷ்யா விதித்துள்ளது. இதனிடையே, ரஷ்ய அதிபர் புடின் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் முக்கியமானது இப்போது நாம் பார்க்கும் புடின், புடினே அல்ல; அவரது பாடி டபுள் (ஒருவரை போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு நபர்) என்பதுதான்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு பெரும் சவலாக இருக்கும் புடின் மற்றும் அவரது உடல்நலன் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவருவது இதுஒன்றும் புதிதல்ல. ஆனாலும், புடின் பாடி டபுள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது உக்ரைன் உளவுப்பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, “புடினின் உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது நிகழ்வில் புடினின் பாடி டபுளை பயன்படுத்துகிறார்கள். அவரது சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரம் மாறுபட்டுள்ளது. பழைய மற்றும் சமீபத்திய புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்தால் புடினின் காது வித்தியாசமாக இருக்கும். கைரேகை போன்றதுதான் காதுகளும். ஒவ்வொரு நபரின் காதும் தனித்துவமானது.” என்று கூறியிருக்கிறார்.

கடந்த மாதம் ரஷ்ய அதிபர் புடின் ஈரான் நாட்டுக்கு சென்றபோதும், இதேபோன்ற ஒரு சந்தேகத்தை உக்ரைன் உளவுத்துறை எழுப்பியிருந்தது. விமானத்தில் இருந்து இறங்கியபோது, வழக்கத்துக்கு மாறாக புடின் விரைந்து நடந்து சென்றதை குறிப்பிட்டு சந்தேகத்தை எழுப்பியிருந்தது உக்ரைன் உளவுத்துறை.

பாடி டபுள் என்றால் என்ன?

பாடி டபுள் என்பது ஒருவரை போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு நபரை குறிக்கும் சொல். சினிமாவில் சண்டைக் காட்சிகளில் நடிகர்களுக்கு பதிலாக டூப் போடுவார்களே அதுபோன்றது. பொதுநிகழ்வில் உண்மையான நபருக்கு பதிலாக அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும் வேறொரு நபர் பயன்படுத்தப்படுவார். பெரும்பாலும், உலக அரசியல்வாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

சண்டை செய்யும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்: என்ன செய்யபோகிறார் ஸ்டாலின்?

பாடி டபுள் பொதுவாக எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்த உதவுகிறது. இதற்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் உண்மையான நபர்களை போன்றே இருப்பர். ஆள்மாறாட்டம் செய்ய வேண்டிய நபரைப் போல பேசவும் நடந்து கொள்ளவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பில்லா திரைப்படத்தில் ஒரிஜினல் பில்லா ரஜினி போன்று மற்றொரு ரஜினிக்கு பயிற்சி அளிக்கப்படுமே அதுபோன்று. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் தோற்றத்தை மாற்ற முடியும். உலக அரசியல்வாதிகளுக்கு டூப் போடுவது என்பது எளிதான காரியமல்ல. தங்களது அடையாளத்தை அனைத்து வகையிலும் மறைக்க வேண்டும்.

ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் போன்று, ஒன்றுபட்ட சோவியத் யூனியன் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் பாடி டபுளை பயன்பத்தியுள்ளதாக சொல்கிறார்கள். ரஷ்யாவின் ரகசிய வரலாற்று பக்கங்களைப் புரட்டினால், ஜோசப் ஸ்டாலினின் உடல் இரட்டிப்பு பற்றிய கதைகள் பல உள்ளன. மேடை பேச்சுகளில் பிரபலமானவராக அறியப்படும் ஜோசப் ஸ்டாலின், முதலாளித்துவவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தை கொண்டிருந்தார். ரஷ்ய உளவுத்துறை ரஷித் என்பவரை தேர்வு செய்து ஜோசப் ஸ்டாலினுக்கான பாடி டபுளாக அவரை உபயோகப்படுத்தியாக கூறப்படுகிறது. பெலிக்ஸ் தாதேவ் என்ற மற்றொரு நபரும் ஜோசப் ஸ்டாலினின் பாடி டபுளாக இருந்துள்ளார். அவர் அதிகம் அறியப்பட்டதில்லை என்ற தகவல்களும் உள்ளன.

ஈராக் முன்னாள் தலைவர் சதாம் உசேன் தனக்கான பாடி டபுளாக மூன்று பேரை பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. அவரது மூத்த மகன் உதய் உசேனும் கூட சதாம் உசேனின் பாடி டபுளாக பயன்படுத்தப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இங்கிலாந்து ராணி எலிசபெத், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோரும் பாடி டபுளை பயன்படுத்தியுள்ளாதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.