இயற்கையோடு இணைந்து கொள்ள ஒரு வாய்ப்பு… மதுரையில் மீண்டும் தொடங்கிய பசுமை நடை!

இரண்டு ஆண்டுகளை கோவாக்சினுடனும், பூஸ்டர் டோஸ்களுடனும் கழித்த நமக்கு, அதிலிருந்து சற்றே நகர்ந்து, காற்றோடும், மலைகளோடும், வரலாற்றோடும், பரந்துபட்ட மனிதர்களோடும், கைகோர்த்து பயணிக்க மீண்டும் வரவேற்புக் கம்பளம் விரிக்கிறது பசுமைநடை அமைப்பு..!

பசுமைநடை

மலைகளைச் சிதைக்கும் கிரானைட் கார்ப்பரேட்டுகளிடமிருந்து, மலைகளையும், அதன் மக்களையும் பாதுகாக்க அவர்களோடு உறுதுணையாய் இணைந்து, 2010ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. 12 ஆண்டுகளில் 120 க்கும் மேற்பட்ட நடை.. ஒவ்வொரு நடையிலும் 1000-க்கும் மேற்பட்ட நண்பர்கள் கூட்டம்.. ஒவ்வொரு கூட்டத்திலும் வரலாறு, தொல்லியல், சூழலியல் குறித்ததான ஒரு விசாலப் பார்வை…!

இந்த ஆண்டு கீழகுயில்குடி சமணமலை..!

“ கடந்த 2 ஆண்டுகளாக சரிவர பசுமைநடையை நடத்த முடியாதது குறித்து சற்று வருத்தம் இருப்பினும், முழுவதும் சரியான பிறகே நடையைத் தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்களில் சிலர் இந்த 2 ஆண்டுகளிலும் அவ்வப்போது இந்த மலைகளை நோக்கி பயணப்பட்டோம். அப்போது, எங்களைப் போல் ஏராளமான மக்களை இங்கு பார்க்க முடிந்தது” என மனம் திறந்தார் எழுத்தாளரும் இதன் ஒருங்கிணைப்பாளருமான அ.முத்துகிருஷ்ணன்.

கீழகுயில்குடி சமணமலை

எல்லா காலத்திலும் மலைகள் மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை நோக்கிப் பயணப்பட தான் மனிதர்களுக்கு நேரமில்லை..!

எங்களுக்கும் காற்றுக்கும் இடையேயான மல்யுத்த போட்டியில், காற்றை பின்னுக்குத்தள்ளி உற்சாகத்தோடு மலையேறினோம். மலையுச்சியிலிருந்து கீழே பார்த்தால் குழந்தைகள் விளையாடும் பொம்மை போல் குட்டிக் குட்டியாக காட்சியளிக்கும் பேருந்துகள்.. விரைந்தோடும் குட்டி ரயில்கள்.. அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் புதர்கள் போல் காட்சியளிக்கும் அடர்ந்த முட்புதர்கள், என இயற்கை எங்களை கைநீட்டி அழைத்தது..!

அங்கே சமண மலையின் வரலாற்றை எடுத்துரைக்கக் காத்திருந்தார் சித்திரவீதிக்காரன் எனும் புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர் சுந்தர். “பௌத்த மதத்தை விட இங்கு சமணம் அதிகளவு பரவியுள்ளது. ஒவ்வொரு 20 கி.மீ தொலைவிலும் நம்மால் அதற்கான சான்றுகளைக் காணமுடியும். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மாதேவி பெரும்பள்ளி எனும் சமணப்பள்ளிகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன” என இம்மலையின் கதையைக் கூறுகிறார் சித்திரவீதிக்காரன்.

சித்திரவீதிக்காரன் | பசுமைநடை

இவரது படைப்பான ‘திருவிழாக்களின் தலைநகரம்’ எனும் நூலின் இரண்டாம் பதிப்பு இங்கு வெளியிடப்பட்டது. மதுரையில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாக்களின் தொகுப்பே இந்நூல். எல்லா மதத்திருவிழாக்கள் பற்றிய குறிப்புகளையும் உள்ளடக்கியதே இந்நூலின் தனிச்சிறப்பு.

இவ்வாறாக ஒவ்வொரு பசுமை நடையிலும் விளக்கப்படும் மற்றும் பேசப்படும் பேசுபொருளானது, மக்களுக்கு புத்துணர்வளித்து, மனதிற்கு இதமளிக்கிறது. இன்றைய நவீன உலகத்தில் இப்படியொரு நடை தேவையும்படுகிறது..!

“இயற்கையிலிருந்து முரண்பட்டு, நாம் உருவாக்கிய கொள்கைகள், பழக்கவழக்கங்கள், நகரமயமாதல், கலாசாரம் இவையெல்லாம் சேர்ந்து நாம் யார் என்பதை நம்மிடமிருந்தே மறைத்துவிட்டது. இதனால் ஏற்படுவதே மன அழுத்தமும் இன்னபிற பிரச்சனைகளும்” என்கிறார் திரைப்பட இயக்குனர் ராம்..!

இயற்கையோடு நாம் மீண்டும் இணைந்துகொள்ள, இயற்கையுடனான நம் உறவைப் புதுப்பித்துக்கொள்ள இதுபோன்ற பசுமை நடைகளே வாய்ப்பளிக்கின்றன!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.