இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலையில் பள்ளம் தோண்டி பணியை நிறுத்திய விவசாயி: விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்: உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம்பேட்டை அருகே  சமத்துவபுரத்திலிருந்து தொடங்கி சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மங்கலம்பேட்டையை சேர்ந்த விவசாயி முகமது அலி(63) என்பவரிடம் சுமார் 50 சென்ட் நிலத்தை நெடுஞ்சாலை துறையினர் கையகப்படுத்தினர். பலருக்கு இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கவில்லை. தொடர்ந்து முகமது அலிக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இருந்து வந்தனர்.

தற்போது இறுதி கட்ட பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக விருத்தாசலத்தில் இயங்கிய தனி தாசில்தார் அலுவலகமும் காலி செய்யப்பட்டு விட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்த முகமது அலி நேற்று தனது நிலத்தின் அருகே போடப்பட்டிருந்த சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 20 அடி நீளம் 5 அடி ஆழம் கொண்ட பள்ளத்தை வெட்டி துண்டித்து பணியை தடுத்து நிறுத்தினார். தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்  உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கூறியபின் அவர் போராட்டத்தை கைவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.