மாணவிகளுக்கு 5ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நிதிநிலை சீரான  பிறகு நிச்சயம் விரைவில் நிறைவேற்றப்படும். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம்தோறும் ரூ.1000 திட்டம் வரும் 5ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று கோவை திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

கோவையை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேத்தியும், திமுக இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பைந்தமிழ்பாரி-கீதா தம்பதியின் மகளுமான நிதிக்கும், பர்கூர் எம்எல்ஏ மதியழகன்-விஜயா தம்பதியின் மகன் கவுசிக் தேவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண விழா கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் நேற்று நடந்தது. இத்திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, நடத்தி வைத்து பேசியதாவது:

திமுகவுக்கு  சோதனை வந்த நேரத்தில் இந்த மாவட்டத்தில் கழகத்தை கம்பீரமாக நிலைநிறுத்திய  பெருமைக்குரியவர் பொங்கலூர் பழனிசாமி. அதேபோல், பர்கூர் தொகுதி  எம்எல்ஏவாக உள்ள மதியழகனும் அப்படித்தான். அவர், கடந்த நாடாளுமன்ற  தேர்தலுக்கு முன்பு, நம் இயக்கத்தில் வந்து சேர்ந்தார். ரஜினிகாந்த்  மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து பணியாற்றிய அவர், ஒருநாள் என்னை  வந்து சந்தித்தார். இந்த இயக்கத்தில் சேரப்போகிறேன், அதற்கு நீங்கள் அனுமதி  தர வேண்டும் என்றார். நான், மாவட்டக் கழக நிர்வாகிகளிடம் கேட்டேன். அதற்கு  அவர்கள், அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது, நல்ல உழைப்பாளி, அன்போடு,  பாசத்தோடு பழகக்கூடியவர், அவர் வந்தால் கழகத்துக்கு மேலும் வலுசேர்க்கும்  வகையில் இருக்கும் எனக் கூறினர். அது எல்லாம் உண்மைதான் என்பதை தற்போது  உணர்கிறேன்.

அன்று நடந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அவர் துணையாக  இருந்துள்ளார். தற்போது எம்எல்ஏவாக உள்ளார். அவரது செயல்பாட்டை பார்த்து,  நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை நம் இயக்கத்தில் சேர்த்ததில் எந்த தவறும்  இல்லை. இந்த இயக்கத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.

தற்போது, தமிழகத்தில் 6வது முறையாக  திமுக ஆட்சி நடந்து வருகிறது. அதுவும், மிக சிறப்பான முறையில் நடந்து  வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதி,  உறுதிமொழி அளித்தோமோ, தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிட்டு  காட்டியுள்ளோமோ அதில் 70 சதவீதம் வரை நிறைவேற்றி விட்டோம். மீதமுள்ள 30  சதவீத அறிவிப்புகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அந்த நம்பிக்கையோடு  மக்கள் இருக்கிறார்கள் என்பதை நானும் அறிவேன்.

நான், கடந்த  நான்கு நாட்களுக்கு முன்புதான் கோவைக்கு வந்தேன். பீளமேடு விமான  நிலையத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு காரில் செல்ல  சுமார் பத்து நிமிடம்தான் ஆகும். ஆனால், அன்று எனக்கு 2 மணி நேரம் ஆனது.  அந்த அளவுக்கு மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். கோரிக்கை மனுவும்  அளித்தனர். பலர் என்னிடம் சிரித்த முகத்துடன் கோரிக்கை மனு அளித்தனர்.  பிற தலைவர்களிடம் மனு அளிக்கும்போது, ஏக்கத்தோடு, வருத்தத்தோடு மனு  அளிப்பதை பார்த்துள்ளேன். ஆனால், என்னிடம் மனு அளிக்கும்போது, ஏதோ  கோரிக்கை நிறைவேறிவிட்டதுபோல் நினைத்து, நன்றி… நன்றி… என்றார்கள்.  நிச்சயம் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையில், நன்றி… நன்றி…  என்கிறார்கள். இதுதான், திராவிட மாடல் ஆட்சி.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ‘’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்னும் பயணத்தை நடத்தினேன். ஒவ்வொரு தொகுதியிலும் மேடையில் பெட்டி வைத்து, மனுக்களை பெற்றேன். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் இம்மனுக்கள் மீது தீர்வு காண்பேன் என்றேன். அதன்படி, அந்த பெட்டிகள் எல்லாம் கோட்டைக்கு வந்தன. அதற்கென தனி துறை உருவாக்கப்பட்டு, தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு, மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. தற்போது,  70% மனுக்களுக்கு  தீர்வு காணப்பட்டுள்ளது.

அங்கு, 200 பேர் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பயனாளிகளிடம் டெலிபோனில் பேசினேன். அப்போது, ஒருவர், அருகில் இருந்த நபரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அதை நான் கேட்டேன். அவர் என்ன பேசினார் தெரியுமா? பத்து ஆண்டில் முடியாத ஒரு பணி, பத்தே நாளில் முடிந்துவிட்டது என்றார். அத்துடன், இன்று முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலினும், நானும் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் ஒன்றாக படித்தோம் என்றார். இதைக்கேட்டு எனக்கு ஒரே ஆச்சரியம். திராவிட மாடல் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதி எம்எல்ஏக்களும், அந்தந்த தொகுதி பிரச்னைகளை, முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவித்தால், அதையும் தீர்த்து வைக்கிறோம் என உறுதிமொழி அளித்துள்ளேன். அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் அந்த பிரச்னையை தீர்த்து வைப்போம் என உறுதிமொழி அளித்துள்ளேன். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, மர்மமாக இருக்கிறது என அக்கட்சியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமே கூறினார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து ஆவியுடன் பேசுகிறேன் என்றார். தியானம் செய்தார். நீதி கேட்டார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார். அவரை சரிசெய்ய, ஒப்புக்காக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கமிஷன் அமைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் அது. நாம், ஆட்சிக்கு வந்தால், அந்த கமிஷனை முறையாக நடத்தி, முறையாக அறிக்கை பெறுவோம் என்றேன். அதன்படி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நீதிபதி ஆறுமுகசாமி என்னிடம் அறிக்கை அளித்தார். அதில், பல விஷயம் உள்ளது. அதை சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து, சட்டமன்றம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.

அதேபோல், தூத்துக்குடி சம்பவமும் அன்றைய ஆட்சி காலத்தில்தான் நடந்தது. அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என சொன்னவர்தான் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த அறிக்கையும் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.  சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வரும் ஆட்சிதான், இந்த திராவிட மாடல் ஆட்சி.

 ஆனால், தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு என ஒவ்வொன்றாக நிறைவேற்றியுள்ளோம்.
வரும் 5ம்தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார். மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த ஸ்மார்ட்கிளாஸ் திட்டம் கொண்டுவந்துள்ளோம். அதை துவக்கி வைக்க அவர் வருகை தருகிறார். அன்றுதான் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம்தோறும் ரூ.1000 திட்டம் துவக்கி வைக்க உள்ளோம்.

அதேபோல், குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமைத்தொகை என்னாச்சு என என்னிடம் சிலர் கேட்டனர். நிச்சயம் வரும். நிதிநிலை சீரான பிறகு அந்த திட்டமும் நிச்சயம் நிறைவேறும். நான், கலைஞரின் மகன். சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின். மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டராக இருந்து வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி, எ.வ.வேலு, காந்தி, மு.பெ.சாமிநாதன், இளித்துரை ராமச்சந்திரன், முத்துசாமி, மு.நாசர், கயல்விழி செல்வராஜ், கலைஞரின் மகள் செல்வி செல்வம், திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., கலாநிதி எம்.பி., ஈஸ்வரன் எம்எல்ஏ, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, பேராசிரியர் அன்பழகனின் மகன் அன்புசெழியன், முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை மாவட்ட திமுக  பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கிருஷ்ணன், சி.ஆர்.ராமச்சந்திரன்,  டாக்டர் வரதராஜன், மருதமலை சேனாதிபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.