காரைக்கால் மாணவர் மரணம்: சிகிச்சையில் அலட்சியம் காட்டியதாக மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம்

புதுச்சேரி: காரைக்கால் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் அரசு மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரைக் காக்கும் பணியில் அலட்சியம் காட்டாமல் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை தரவேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.

புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலமணிகண்டன். 8-ம் வகுப்பு படிக்கும் பாலமணிகண்டன் வகுப்பிலும், போட்டிகளிலும் முதலிடம் பிடித்து வந்தார். இதனால் சக மாணவியின் தாயார் சகாயராணி விஷம் கலந்த குளிர்பானத்தை வாட்ச்மேனிடம் கொடுத்தனுப்பினார். இதை அருந்திய பாலமணிகண்டன் மயங்கிவிழுந்ததால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். மாணவருக்கு சிகிச்சை அளித்ததில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து புதுவை சுகாதாரத்துறை காரைக்கால் மாணவர் மரணம் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவர் முரளி தலைமையில் டாக்டர்கள் ரமேஷ், பாலசந்தர் அடங்கிய 3 பேர் விசாரணை குழுவில் இடம்பெற்றனர். இந்தக் குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்தக் குழு அறிக்கையை சுகாதாரத் துறைச் செயலரிடம் அளித்திருந்தனர். அதில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குறைச்சொல்லி ஏதுமில்லை என்று சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் சிகிச்சை சரியில்லை என்று குற்றம்சாட்டி பல அமைப்புகள் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், சுகாதாரத் துறையை கவனிக்கும் முதல்வர் ரங்கசாமி, “மாணவருக்கு முறையான சிகிச்சை அளிக்க தவறிய 2 அரசு டாக்டர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

புதுவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை கலந்தாய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “2 தினங்களுக்கு முன்பு காரைக்காலில் விஷம் கொடுக்கப்பட்ட பள்ளி மாணவனுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் இருந்தது என்ற குறை கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2 அரசு டாக்டர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரைக் காக்கும் பணியில் அலட்சியம் காட்டாமல் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டாக்டர்கள் விவரம் தொடர்பாக சுகாதாரத் துறையில் கேட்டதற்கு, விரைவில் அரசு ஆணை வெளியாகும் என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.