ரூ.381 கோடியில் மேம்படுத்தப்படும் தூத்துக்குடி விமான நிலையம்: புதிய வசதிகள் விவரம்

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை சமாளிக்கவும், சிறந்த சேவைகளை வழங்கவும், தொடர்புகளை விரிவுப்படுத்தவும் இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூலம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி விமானநிலையத்தில் ஏ-321 ரக விமானங்களை இயக்குவதற்கு ஏற்ற வகையில், ஓடு பாதையை விரிவுபடுத்துதல், புதிய ஓடுபாதை அமைத்தல், புதிய முனையக் கட்டடம், தொழில்நுட்ப பிரிவு, கட்டுப்பாட்டு கோபுரம், புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை ரூ.381 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன.

13,500 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்படும் புதிய முனையம் நெரிசல் மிகுந்த நேரத்தில் 6,00 பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். 2 மேம்பாலங்கள், கார் நிறுத்தும் வசதிகள், புதிய அணுகு சாலை ஆகியவற்றுடன் அனைத்து நவீன வசதிகள், பயணிகளுக்கான வசதிகளை கொண்டதாக இந்தக் கட்டடம் இருக்கும்.

இந்தப் பகுதியின் புகழ்மிக்க செட்டிநாடு இல்லங்களால் கவரப்பட்டு புதிய முனையம் தென்பிராந்தியத்தின் தனித்துவ கட்டுமான அடையாளத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். இது இந்த முனையத்தின் வடிவமைப்பில் புதிய பரிமாணத்தைக் கொண்டுவரும். இந்தக் கட்டடத்தின் கலை வடிவம், உள்ளூர் கலாச்சாரத்தையும் பாரம்பரிய கலை வடிவத்தையும் தெளிவாக வெளிப்படுத்தும்.

கட்டடத்தின் உட்பகுதிகள் பயன்பாட்டு பொருட்கள் மற்றும் அமைப்பின் மூலம் இந்த நகரின் கலாச்சாரம் மற்றும் தன்மைகளை பிரதிபலிக்கும். நீடிக்கவல்ல அம்சங்களுடன் எரிசக்தி சேமிப்பு விகிதத்தில் நான்கு நட்சத்திர விடுதியைப் போல் புதிய முனையம் அமையும்.

தமிழகத்தின் தென்பகுதியில் மதுரைக்கு அப்பால் உள்ள ஒரே விமான நிலையமாக தூத்துக்குடி விமானநிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை மேம்படுத்துவது, பயணிகள் சேவைகளை விரிவுப்படுத்தும் உள்ளூர் சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது மட்டுமின்றி தூத்துக்குடி, அருகே உள்ள திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டங்களின் வர்த்தகத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்தும். இந்த விமான நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் விரிவாக்கும் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.